குடும்பத்தின் பிடியிலிருந்து ஜனநாயகத்தை மீட்கப் போராடியவர் அத்வானி: பிரதமர் மோடி

வாரிசு அரசியல் சித்தாந்தத்துக்கு சவால் விடுத்து, அனைத்தையும் உள்ளடக்கிய தேசியவாத சித்தாந்தத்துடன் இந்திய ஜனநாயகத்தை இணைத்தவர் அத்வானி.
குடும்பத்தின் பிடியிலிருந்து ஜனநாயகத்தை மீட்கப் போராடியவர் அத்வானி: பிரதமர் மோடி
ANI

ஒரு கட்சி மற்றும் குடும்பத்தின் பிடியிலிருந்து இந்திய ஜனநாயகத்தை மீட்க அத்வானி தொடர்ச்சியாகப் போராடியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படுவதாக பிரதமர் மோடி இன்று காலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் தனது குறிப்பில் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறித்து ஒடிஸா மாநிலம் சாம்பல்பூரில் பேசிய பிரதமர் மோடி, "ஒரு கட்சி மற்றும் குடும்பத்தின் பிடியிலிருந்த இந்திய ஜனநாயகத்தை விடுவிக்க அத்வானி தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருந்தார். அனைவரையும் வழிநடத்தி, வாரிசு அரசியல் சித்தாந்தத்துக்கு சவால் விடுத்து, அனைத்தையும் உள்ளடக்கிய தேசியவாத சித்தாந்தத்துடன் இந்திய ஜனநாயகத்தை இணைத்தார். இதன் பலனைதான் இன்று நாம் கண்முன்னே காண்கிறோம். அத்வானிக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014-ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து அறிவிக்கப்பட்டும் 7-வது பாரத ரத்னா விருது இது. இதுவரை கர்ப்பூரி தாக்குர், மதன் மோகன் மால்வியா, அடல் பிஹாரி வாஜ்பாயி, பிரனாப் முகர்ஜி, பூபென் ஹசரிகா மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8, 1927-ல் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் கராச்சியில் பிறந்தவர், எல்.கே. அத்வானி. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அவருடைய குடும்பம் இந்தியாவுக்கு வந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைத்துக்கொண்ட அத்வானி, பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டார். 1980-ல் தொடங்கப்பட்ட பாஜகவின் தலைவராக நீண்ட காலம் அவர் பணியாற்றினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 1990-ல் ரத யாத்திரை நடத்தினார் அத்வானி. உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in