ராமர் கோயில் விவகாரம்: தில்லி வீட்டைக் காலி செய்ய மணி சங்கர் ஐயருக்கு நோட்டீஸ்!

வீட்டைக் காலி செய்துவிட்டு காலனியை விட்டு வெளியேறுமாறும் ஜங்புரா விரிவாக்க நலச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

அயோத்தி கோயில் திறப்பு விழா நாளன்று பாஜக அரசைக் கண்டித்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த மணிசங்கர் ஐயர் மற்றும் அவரது மகள் சூரண்யா ஐயர் ஆகியோரைக் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்யுமாறு குடியிருப்போர் நலச்சங்கம் அறிவித்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

மயிலாடுதுறை முன்னாள் எம்.பி. மணி சங்கர் ஐயர், அவருடைய மகள் சுரண்யா ஐயர் உள்ளிட்டோர் தெற்கு டெல்லியின் ஜங்புரா பகுதியில் வசித்து வருகிறார்கள். கடந்த மாதம் ஜனவரி 20 அன்று, அயோத்தி கோயில் திறப்பு விழாவைக் கண்டித்து காலனி வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மணி சங்கர் ஐயர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். சக முஸ்லிம் குடிமக்கள் மீதான அன்பு மற்றும் துக்கத்தின் வெளிப்பாட்டின் காரணமாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்புப் பகுதி அது. அதே காலனியில்தான் மணி சங்கர் ஐயரின் குடும்பமும் வசித்து வருகிறது. இது குறித்து பாஜக கட்சியின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள பதிவில், ராமர் கோயில் திறப்பு விழாவுக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்காக மணி சங்கர் ஐயரின் குடும்பம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மணி சங்கர் ஐயர் குடும்பத்தினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து ஜங்புரா விரிவாக்க நலச் சங்கம் (ஜே.இ.டபிள்யூ.ஏ) விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியது. சக குடியிருப்புவாசிகள் மத்தியில் வெறுப்பைத் தூண்டும் வகையில் நடந்து கொண்டதாகவும், உடனே வீட்டைக் காலி செய்துவிட்டு காலனியை விட்டு வெளியேறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த நோட்டீஸில், "குடியிருப்பில் உள்ளவர்களுக்கிடையே நல்லுறவைப் பேணுவது எங்களுடைய பொறுப்பு. காலனியின் அமைதியைக் கலைக்கும் வகையிலோ அல்லது சகக் குடியிருப்புவாசிகளின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ யாராவது நடந்து கொண்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பாகிஸ்தானில் இருந்து தங்களது குடும்பத்தையும் சொத்துகளையும் விட்டுவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் வசிக்கும் பகுதியில் இத்தகைய பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. ராமர் கோயிலுக்கு எதிராக நீங்கள் செய்த செயல் சரிதான் எனக் கருதினால், இந்தக் குடியிருப்பைக் காலி செய்துவிட்டு. இத்தகைய வெறுப்புப் பேச்சை சகித்துக் கொள்ளும் பகுதியில் குடியேறுங்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

மணி சங்கர் ஐயர், மீண்டும் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கியிருப்பதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in