ஹேமந்த் சோரன் கைது: ஜார்க்கண்ட் மாநிலத்துக்குப் புதிய முதல்வர்
ANI

ஹேமந்த் சோரன் கைது: ஜார்க்கண்ட் மாநிலத்துக்குப் புதிய முதல்வர்

ரூ.600 கோடி நில மோசடி தொடர்பான வழக்கு அமலாக்கத்துறையால் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வந்தது. 6 மணி நேர விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் ஜார்கண்ட் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையின் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை ஆளுநரிடம் தந்த பின்னரே கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மதியம் ராஞ்சியில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அமலாக்கத்துறை விசாரணை ஆரம்பமானது. 6 மணி நேரம் நீடித்த விசாரணைக்குப் பின்னர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை கைது செய்யும் உத்தரவை அமலாக்கத்துறை அதிகாரிகள் வழங்கினார்கள்.

ரூ .600 கோடி நில மோசடி தொடர்பான வழக்கு அமலாக்கத்துறையால் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கடந்த திங்கள் கிழமை அவரது டெல்லி இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள். அங்கிருந்த 36 லட்சம் ரூபாயையும் அவரது காரையும் பறிமுதல் செய்தததைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடி அதிகரித்தது.

ஆளுநரைச் சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் கைது செய்யப்படுவதற்கு ஒப்புக்கொண்டதன் பேரில் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கும் வரை கைது செய்யப்படுவதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர், அமலாக்கத்துறையின் விசாரணைக்குப் பின்னர் அதிரடியாகக் கைது செய்யப்படுவது இதுதான் முதல் முறை. ஹேமந்த் சோரனின் கைது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சம்பாய் சோரன், அம்மாநிலத்தின் புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in