அமலாக்கத் துறை விசாரணையில் லாலு குடும்பம்: பிகாரில் தொடரும் அரசியல் சுழல்

பல முறை சம்மன் அனுப்பியும் லாலுவும், அவரது மகனும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
லாலு பிரசாத் யாதவ் - தேஜஸ்வி யாதவ்
லாலு பிரசாத் யாதவ் - தேஜஸ்வி யாதவ்ANI

முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொண்ட நிலையில் இன்று அவரது மகனும், பிகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார். 

2004 - 2009 காலகட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே துறை அமைச்சராக லாலு இருந்தபோது ரயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களில் 'குரூப் டி' பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்குப் பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நில மோசடி வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத் துறை இரண்டும் விசாரித்து வருகின்றன. ஏற்கெனவே லாலு குடும்பத்தினரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக லாலு குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை அமலாக்கத் துறை கைது செய்த பின்னர் வழக்கு சூடுபிடித்தது. 

கடந்தாண்டு முதல் பல முறை முறை சம்மன் அனுப்பியும் லாலுவும் அவரது மகனும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சென்ற மாதம் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று லாலுவும் இன்று அவரது மகனும் விசாரணைக்கு ஆஜரானார்கள். நேற்று தன்னுடைய மகளோடு விசாரணைக்கு ஆஜரான லாலுவை பத்து மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். 

அமலாக்கத் துறை விசாரணை குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய லாலுவின் மகள், "எங்கள் குடும்ப உறுப்பினர்களை மத்திய அரசு எத்தனை தடவை விசாரணைக்கு அழைத்தாலும், முழுமையான ஒத்துழைப்பைத் தந்துள்ளோம். அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கிறோம். அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றார். 

இந்நிலையில் பிகார் சட்டப்பேரவைத் தலைவர் அவாத் பிகாரி சௌதரிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பாஜகவின் துணை முதல்வர் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள். 2022ல் பிகாரில் கூட்டணி ஆட்சி வந்தபோது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அவாத் பிகாரி சௌதரி சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்ய அவர் தயாராக இல்லை. 

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும் நிலையில் பிகார் சட்டப்பேரவையில் பல வாண வேடிக்கைகளுக்கு வாய்ப்பிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in