சமாஜவாதி வேட்பாளர்களை அறிவித்தது எங்களுக்குத் தெரியாது: காங்கிரஸ்

"சமாஜவாதி கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டால், அவர்கள்தான் தகவல் தெரிவிக்க வேண்டும்."
அவிநாஷ் பாண்டே (கோப்புப்படம்)
அவிநாஷ் பாண்டே (கோப்புப்படம்)ANI

உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை சமாஜவாதி அறிவித்தது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என காங்கிரஸ் பொறுப்பாளர் அவிநாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

சமாஜவாதி, காங்கிரஸ் கட்சிகள் இண்டியா கூட்டணியின் அங்கமாக உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த 27-ம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று 16 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை சமாஜவாதி அறிவித்தது. அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்துக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் அவிநாஷ் பாண்டேவிடம் இதுதொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், "நீங்கள் சொல்வது பற்றி எனக்கு எந்தத் தகவலும் இல்லை. சமாஜவாதி கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டால், அவர்கள்தான் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 20 இடங்கள் கேட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சமாஜவாதி 11 இடங்களை மட்டுமே ஒதுக்கியது காங்கிரஸ் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. தொகுதிப் பங்கீடு குறித்து சமாஜவாதியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், சமாஜவாதி வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது, இதுகுறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் கூட்டணியின் நிலைத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, இண்டியா கூட்டணியின் அங்கமாக இருந்தாலும் மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் முறையே திரிணமூல், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. பிகாரில் இண்டியா கூட்டணியிலிருந்து விலகி தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் 9-வது முறையாக முதல்வராகியுள்ளார். இண்டியா கூட்டணியில் இந்த சிக்கல்கள் இருக்க, தற்போது சமாஜவாதியின் இந்த வேட்பாளர் அறிவிப்பு உத்தரப் பிரதேசத்திலும் இண்டியா கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதா என்கிற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in