கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக கவன ஈர்ப்புத் தீர்மானம்: திமுக வலியுறுத்தல்

"இந்த அரசு 5 ஆண்டுகளாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை. இந்த முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும்."

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பாக கே. சுரேஷ், திமுகவிலிருந்து டி.ஆர். பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர். பாலு, திமுக சார்பாக கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்களைப் பட்டியலிட்டதாகக் கூறினார்.

"மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். கூட்டத்தொடரில் பேசக்கூடிய விவகாரங்கள் குறித்து நானும், திருச்சி சிவாவும் விரிவாக எடுத்துரைத்தோம்.

முதலில் கவன ஈர்ப்புத் தீர்மானம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராகவும், அவர்களது கொள்கைகளுக்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிற ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். இதற்கானப் பதிலை அரசுத் தரப்பில் தெரிவிக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறியிருக்கிறோம்.

5 ஆண்டுகளாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை. இந்த முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்றோம். இந்திய குடியுரிமைச் சட்டம் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு ஊறு விளைவிக்கின்ற சட்டம். இதிலுள்ள மிக முக்கியமான கருத்துகள், ஷரத்துகள் உள்ளிட்டவையெல்லாம் நீக்க வேண்டும் என்று இந்த அவையில் பேசி முடிவெடுக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்துக்குப் புறம்பான கருத்து. அமைச்சர்களே இதுகுறித்து பேசுகிறார்கள். இதைத் தடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதிலிருந்து அப்படியேதான் இருக்கிறது. அதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள், கல்லூரிகள் வந்துவிட்டன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் வரவில்லை. இதுகுறித்துப் பேச வேண்டும் என்று கூறியிருக்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. எத்தனை ஆண்டுகள் நிலுவையில் வைத்திருக்க முடியும் என்பது குறித்த பேச வேண்டும் என்று கூறியிருக்கிறோம். சேது சமுத்திர திட்டத்தைத் தொடங்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும்கூட, 2, 3 வருடங்களாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேச வேண்டும் என்றோம்.

நீதித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றோம். ஊழியர்களுடைய குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ. 1,000 என்று கொடுத்து வருகிறார்கள். இதைக் குறைந்தபட்சம் மாதந்தோறும் ரூ. 3,000 ஆக உயர்த்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார் டி.ஆர். பாலு.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in