சண்டிகர் மேயர் தேர்தல்: இண்டியா கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றி

முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட இண்டியா கூட்டணி பாஜகவிடம் தோல்வியடைந்திருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்
மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்ANI

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றுள்ளது.

சண்டிகரில் ஜனவரி 8-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெறவிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போக, இந்தத் தேர்தல் ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்துப் போட்டியிடுவதாக கடந்த 18-ம் தேதி முடிவெடுத்தன. இதை பாஜக மற்றும் இண்டியா கூட்டணி இடையிலான முதல் நேரடிப் போட்டி என்று ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா கூறினார்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப இன்று மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டத்தில் பாஜக மேயர் வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகளைப் பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் குல்தீப் 12 வாக்குகளைப் பெற்றார். எனினும், 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.

ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் துணை மேயர் தேர்தலில் வாக்களிக்க மறுத்ததைத் தொடர்ந்து துணை மேயராக ரஜிந்தர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட இண்டியா கூட்டணி பாஜகவிடம் தோல்வியடைந்திருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். சண்டிகர் பாஜக பிரிவுக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in