எஸ்சி/எஸ்டி, ஓபிசி காலிப்பணியிடங்களில் பொதுப் பிரிவினர்?: முடிவைத் திரும்பப் பெற்ற யுஜிசி

யுஜிசியின் இறுதி வழிகாட்டுதல்களில் இந்த அம்சம் இடம்பெறாது என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.
யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் (கோப்புப்படம்)
யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் (கோப்புப்படம்)படம்: https://twitter.com/mamidala90

உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான நிரப்பப்படாத காலிப் பணியிடங்களை, பொதுப் பிரிவினருக்கானப் பணியிடமாக மாற்றுவதற்கான முடிவை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திரும்பப் பெற்றது.

உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களை பொதுப் பிரிவினருக்கானப் பணியிடமாக மாற்றி, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. உயர்கல்வி நிறுவனங்களில் குரூப் ஏ பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களைத் தவிர்க்க முடியாத காரணங்களில் பொதுநலனைக் கருத்தில்கொண்டு அவற்றைப் பொதுப் பிரிவினருக்கானப் பணியிடங்களாக மாற்றி அவற்றை நிரப்புவதற்கான முன்மொழிவுகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளலாம் என யுஜிசி தனது வழிகாட்டுதல்களுக்கான வரைவு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இது செய்திகளில் வெளியானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, யுஜிசியின் இறுதி வழிகாட்டுதல்களில் இந்த அம்சம் இடம்பெறாது என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.

தி நியூ இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜெகதீஷ் குமார், இது வெறும் வரைவு அறிக்கைதான் என்றும் யுஜிசியின் இறுதி வழிகாட்டுதல்களில் இது இடம்பெறாது என்றும் தெரிவித்தார். மேலும், இடஒதுக்கீடு குறித்த பல்வேறு சட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் கொண்டுள்ள ஓர் ஆவணம்தான் இது என்ற ஜெகதீஷ் குமார், இறுதி வடிவத்தில் காலிப் பணியிடங்களைப் பொதுப் பிரிவினருக்கானப் பணியிடமாக மாற்றுவதற்கான அம்சம் இடம்பெறாது என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in