மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் கிடையாது, தேர்தலும் இருக்காது: கார்கே எச்சரிக்கை

புவனேஷ்வரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுதான் கடைசி வாய்ப்பு என்றார்.
மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் கிடையாது, தேர்தலும் இருக்காது: கார்கே எச்சரிக்கை
படம்: எக்ஸ் தளம் | மல்லிகார்ஜுன கார்கே

புவனேஷ்வரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒருவேளை மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்தியாவில் ஜனநாயகமும் இருக்காது, தேர்தலும் இருக்காது. சர்வாதிகாரம் மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கானப் பணிகளை காங்கிரஸ் கட்சி ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்புள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாகவும், 2019 தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. குறுகிய கால அவகாசமே இருப்பதன் காரணமாகத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகிறார்கள். இரண்டு வாரங்களுக்குள் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்ய வேண்டியுள்ளது.

தேர்தலை எதிர்கொள்வதற்கான மாநில அளவிலான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் தெலங்கானாவில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

ஒடிசா மாநிலத்தைப் பொறுத்தவரை புவனேஷ்வரில் காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

"மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகமும் இருக்காது, தேர்தலும் இருக்காது, சர்வாதிகாரம் மட்டுமே அமலில் இருக்கும். அமலாக்கத் துறை அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புகிறது. எதிர்க்கட்சிகளை சீண்டிப்பார்க்கிறது.

எதிர்க்கட்சிகள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி நட்பைப் பிரிக்கிறார்கள். இதனால் சிலர் கட்சியை விட்டு விலகுகிறார்கள். சிலர் கூட்டணியை விட்டு விலகுகிறார்கள். இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயக முறையில் தேர்தலில் வாக்களிக்க இதுதான் கடைசி வாய்ப்பு. இதற்குப் பின்னர் தேர்தல்கள் நடைபெறப்போவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in