56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு பிப். 27-ல் தேர்தல்

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.
56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு பிப். 27-ல் தேர்தல்
ANI

56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் உள்பட 15 மாநிலங்களிலிருந்து 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி வரும் ஏப்ரல் மாதத்துடன் காலியாகிறது. உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து மொத்தம் 50 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி ஏப்ரல் 2-ம் தேதி காலியாகிறது. ஒடிஸா மற்றும் ராஜஸ்தானிலிருந்து மொத்தம் தலா மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி ஏப்ரல் 3-ம் தேதியுடன் காலியாகிறது.

இந்தப் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் பிப்ரவரி 15. வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 20.

பிப்ரவரி 27-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய நாள் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கர், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களலிருந்து குறைந்தபட்சம் தலா 1 இடத்துக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in