பிகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்

பாஜகவுடன் கைகோர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் உள்ளார்.
பிகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பிகாரில் கடந்த சில நாள்களாகவே முதல்வர் நிதிஷ் குமார் கூட்டணி மாறுவதற்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ-க்கள் கூட்டம் நிதிஷ் குமாரின் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகரைச் சந்தித்த நிதிஷ் குமார், மெகா கூட்டணியை முறித்துக்கொள்வதாகக் கூறி ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

ஆளுநரைச் சந்தித்த பிறகு நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். ஆட்சியைக் கலைக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். பிகாரில் ஆளும் கூட்டணியில் அரசு சார்ந்த விவகாரங்கள் சரியானதாக இல்லை. இதனால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அனைவரது கருத்தையும் கேட்டபிறகே நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ஆட்சி இன்று கலைக்கப்படுகிறது" என்றார்.

நிதிஷ் குமாரின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். எனினும், நிதிஷ் குமாரை காபந்து முதல்வராகச் செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பிகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்வது இது 8-வது முறை.

பிகார் சட்டப்பேரவையில் மொத்தம் 243 தொகுதிகள். ராஷ்ட்ரிய ஜனதா தளம் 79 உறுப்பினர்களையும், பாஜக 78 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 45 உறுப்பினர்களையும், காங்கிரஸ் 19 உறுப்பினர்களையும், சிபிஐ (எம்-எல்) 12 உறுப்பினர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 உறுப்பினர்களையும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பின்மை) 4 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. ஏஐஎம்ஐஎம் 2 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இது தவிர சுயேட்சை உறுப்பினர் ஒருவர் உள்ளார்.

பாஜகவுடன் கைகோர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in