இண்டியா கூட்டணியிலிருந்து திரிணமூல் விலகியதால் எந்தப் பாதிப்பும் இல்லை: சீதாராம் யெச்சூரி

மாநில சூழலைக் கருத்தில் கொண்டு திரிணமூல், ஆம் ஆத்மி முடிவெடுத்திருப்பதாக யெச்சூரி கருத்து
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

மேற்கு வங்க மாநிலத்தில் இண்டியா கூட்டணியிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி விலகியிருப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லையென்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.

மாநில சூழலைக் கருத்தில் கொண்டு திரிணமூல் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் அப்படியொரு முடிவெடுத்திருப்பதாகவும் தேசிய நலன் குறித்த பார்வை எதுவுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கூட்டணிக் கட்சியுடனான தொகுதிப் பங்கீடுகள் குறித்து சீதாராம் யெச்சூரி பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது:

"கூட்டணியில் இருந்தாலும் மாநிலத்தின் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு கட்சியும் அவரவர் வசதிக்கேற்ற நிலைப்பாட்டை எடுப்பதுண்டு. சம்பந்தப்பட்ட இரண்டு மாநிலங்களிலும் எடுக்கப்பட்ட முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டவை. எங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்படவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறோம்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டோம். அதன்மூலம் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸின் எதிர்ப்பு வாக்குகளைப் பெறுவதே எங்களுடைய நோக்கமாக இருந்தது. அதேபோன்று நாடாளுமன்றத் தேர்தலிலும் இணைந்து செயல்படுவோம். திரிணமூல் கட்சியினர் எங்களையும் விமர்சித்திருக்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டதில்லை.

திரிணமூல் அவசரப்பட்டு முடிவெடுத்துள்ளது. அது அவர்களுடைய விருப்பம். கேரளத்தில் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே நேரடிப் போட்டி உள்ளது. இதன் காரணமாக பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை இருக்கிறது.

இண்டியா கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு குறித்து பேசி வருகிறோம். மாநில அளவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவேண்டும். மகராஷ்டிரம், பிகார், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே பேச்சுவார்த்தை ஆரம்பமாகிவிட்டது. இம்மாத இறுதிக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று நம்புகிறேன்" என்றார் யெச்சூரி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in