மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறாரா நிதிஷ்குமார்?

பிப்ரவரி 4 அன்று பாட்னாவில் நடைபெறவிருக்கும் கர்ப்பூரி தாக்குர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடியுடன் முதல்வர் நிதிஷ் குமார் மேடையேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நிதிஷ் குமார் (கோப்புப்படம்)
நிதிஷ் குமார் (கோப்புப்படம்)ANI

காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த பிகார் முதல்வரும் ஜக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், பாஜகவுடன் மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக பாட்னா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பிப்ரவரி 4 அன்று பாட்னாவில் நடைபெறவிருக்கும் கர்ப்பூரி தாக்குர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடியுடன் முதல்வர் நிதிஷ் குமார் மேடையேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆலோசிக்க ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகளை முதல்வர் பாட்னாவுக்கு அழைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பாட்னா பேரணிக்கு முன்னதாக அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், பிகார் சட்டப்பேரவையைக் கலைத்துவிடவும் பரிந்துரை செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில், நிதிஷ்குமாரின் ஜக்கிய ஜனதா தளத்திற்கு 45 இடங்கள் மட்டுமே உள்ளன. பாஜகவுக்கு 82 இடங்களும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு 79 இடங்களும் கைவசம் உள்ளன.

72 வயதாகும் நிதிஷ் குமார் இதுவரை நான்கு முறை அணி மாறியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். 2022ல் பாஜகவிடமிருந்து விலகி லாலு கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். லாலு மகனான தேஜஸ்வி யாதவ், துணை முதல்வரானார். அதற்கு பின்னர் இண்டியா கூட்டணியை அமைப்பதற்காகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து நிதிஷ் குமார் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறார். 

மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை இண்டியா கூட்டணியின் தலைவர் பதவிக்கு முன்மொழிந்திருந்தார்கள். இண்டியா கூட்டணியின் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நிதிஷ் குமார் முன்னிறுத்தப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டது நிதிஷ் குமார் வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியது.  

இவற்றுக்கு மத்தியில் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. பிகார் அரசியலில் இது திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பூரி தாக்குரின் பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது, வாரிசு அரசியல் பற்றியும் பேசினார். வாரிசு அரசியலை தாக்குர் வெறுத்தார் என்று பேசியது லாலு குடும்பத்தினரை அதிருப்தியில் தள்ளியிருக்கிறது. 

லாலு பிரசாத் யாதவ் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி உட்பட அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது. எனினும், நிதிஷ் குமார், பாஜக பக்கம் வருவதை உள்ளூர் பாஜக தலைவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in