மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கும் கலைத் துறைக்காக பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது
படம்: எக்ஸ் தளம் | விஜயகாந்த்

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு கலைத் துறைக்காக பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய பத்ம விருதுகளை மத்திய அரசு குடியரசு நாளை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. இந்த ஆண்டு 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 110 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 132 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 30 பேர் பெண்கள். தமிழ்நாட்டிலிருந்து 8 பேர் பத்ம விருதுகளை வென்றுள்ளார்கள்.

கலைத் துறைக்காக தமிழ்நாட்டிலிருந்து பழம்பெரும் நடிகை வைஜயந்தி மாலாவுக்கும், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமண்யத்துக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கும் கலைத் துறைக்காக பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு கலைத் துறைக்காக பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து கலைத் துறைக்காக பத்ரப்பன், பழம்பெரும் நாதஸ்வரக் கலைஞர் சேஷம்பட்டி டி சிவலங்கம், விளையாட்டுத் துறைக்காக ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, இலக்கியம் மற்றும் கல்வித் துறைக்காக ஜோ டி கிரஸ், மருத்துவத் துறைக்காக நாச்சியார் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ரப்பன் கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர். 87 வயதுடைய இவர் பெண்களுக்கு வள்ளி கும்மி ஒயிலாட்டப் பயிற்சியை அளித்து வருகிறார்.

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, பாடகி உஷா உதுப் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள ரோஹன் போபண்ணாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதாளர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் மார்ச், ஏப்ரலில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுகளை வழங்குவார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in