மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ராகுல் கைது: அசாம் முதல்வர்

"மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கைது செய்தால் அது அரசியலாக்கப்படும். தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது."
அசாமில் ராகுல் காந்தி
அசாமில் ராகுல் காந்திANI

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அசாம் காவல் துறை ராகுல் காந்தியைக் கைது செய்யும் என அந்த மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைப்பயணம் அசாமில் நடைபெற்று வருகிறது. குவாஹாத்திகுள் நுழையும்போது காங்கிரஸ் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதனால், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அசாம் காவல் துறையினர் இடையே மோதல் போக்கு நிலவியது.

இதுதொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"3,000 பேரைத் திரட்டி 200 வாகனங்களுடன் குவாஹாத்திக்குள் நுழைந்தால் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. குவாஹாத்தியின் மத்தியில் செல்லாமல், தங்களுக்கு வசதியான பாதையில் செல்லுமாறு கடந்த 6 நாள்களாக அவர்களை அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு கூறிய பிறகும் காங்கிரஸ் தொண்டர்கள் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்கள்.

வாகனத்தில் நின்றபடி அனைத்து நிகழ்வுகளையும் ராகுல் காந்தி தூண்டிவிடுகிறார். அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படும். காவல் துறையினர் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். அவரை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கைது செய்வோம்" என்றார்.

ராகுலைக் கைது செய்வது குறித்து அசாம் முதல்வர் மேலும் கூறுகையில், " ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், அசாம் நிலையை சீர்குலைக்கவும் தான் அனைத்து நிகழ்வுகளும் நடந்துள்ளன. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவரைக் கைது செய்வோம். முன்னதாக கைது செய்தால் அது அரசியலாக்கப்படும். தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழு இதுதொடர்பாக விசாரிக்கும். எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. தடுப்புகளை உடைக்க அவர் தூண்டிவிட்ட பிறகு குவாஹாத்தியில் மிகப் பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. காரணம் நாங்களதான் தேர்தலில் வெற்றி பெறப் போகிறோம்" என்றார் அசாம் முதல்வர்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கௌரவ் கோகோய் வியாழக்கிழமை கூறுகையில், அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ராகுல் காந்தி மீது வழக்குகளைப் பதிவு செய்யட்டும். நாட்டை ஒன்றிணைக்க, காங்கிரஸ் கட்சி ஒற்றுமைக்கான நடைப்பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in