காங்கிரஸ் - திரிணமூல் கூட்டணி உடைந்ததற்கு என்னதான் காரணம்?

மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌதரியின் அதிரடி விமர்சனங்களே திரிணமூல் கட்சி நிர்வாகிகளின் கோபத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது
காங்கிரஸ் - திரிணமூல் கூட்டணி உடைந்ததற்கு என்னதான் காரணம்?
ANI

நாங்கள் முடிந்த அளவுக்கு பொறுமையோடு இருந்தோம். தொகுதிப் பங்கீடு விஷயத்திலும் தாராள மனதோடு அணுகினோம். ஆனால், மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌதரியின் செயல்பாடுகள்தான் கூட்டணியை விட்டு பிரிவதற்குக் காரணம் என்று திரிணமூல் கட்சி சுட்டிக்காட்டியிருக்கிறது.

தனித்துப் போட்டியிடுவதாக மமதா பானர்ஜி நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. தொகுதிப் பங்கீடு விஷயத்தில் உடன்பாடு எட்ட முடியாததுதான் காரணம் என்று கூறப்பட்டாலும் உள்ளூர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் செயல்பாடுகள்தான் மமதா பானர்ஜியின் அதிருப்திக்குக் காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌதரியின் அதிரடி விமர்சனங்களே திரிணமூல் கட்சி நிர்வாகிகளின் கோபத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. பொதுவெளியில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்ததுடன், தொகுதி ஒதுக்கீடு பேச்சு வார்த்தைகளிலும் கடுமை காட்டியதாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் பத்து இடங்கள் வேண்டும் என்று அவர் கேட்டதாகவும் மமதா பானர்ஜியோ பெர்ஹாம்பூர் மற்றும் மால்டா தெற்கு என இரண்டு இடங்களை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கத் தயாராக இருந்ததாகவும் தெரிகிறது.

முதல்வர் மமதா பானர்ஜியும், கட்சியின் புதிய பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவரது மருமகனான அபிஷேக் பானர்ஜியும் பாஜகவுடன் ரகசிய உறவில் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசியது நிலைமையை சிக்கலாக்கிவிட்டது. காங்கிரஸ் மாநிலத் தலைமையின் அணுகுமுறை சரியில்லாத காரணத்ததால் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுக்க வேண்டியதாகிவிட்டது என்று திரிணமூல் கட்சியின் எம்பியும் செய்தித் தொடர்பாளருமான டெரிக் ஓ பிரையன் விளக்கம் தந்துள்ளார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைப்பயணம் மேற்கு வங்க மாநில எல்லையை எட்டியிருக்கிறது. மமதா பானர்ஜி இல்லாத இண்டியா கூட்டணியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேசி, பிரச்னை சரி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

திரிணமூல் வட்டாரமோ முடிவைப் பரிசீலனை செய்வதற்குத் தயாராக இல்லை. மமதா பானர்ஜியை சந்தர்ப்பவாதி என்று விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களோடு ஒருநாளும் கூட்டணி சேரப்போவதில்லை. ஒருவேளை தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு கேட்டால் நிச்சயம் தருவோம். ஆனால், தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் உடன் கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in