மமதா இல்லாத கூட்டணியை நினைத்துக்கூட பார்க்க முடியாது: ஜெய்ராம் ரமேஷ்

"மமதா பானர்ஜி, இண்டியா கூட்டணியின் மிக முக்கியமானத் தூண் என்பதை ராகுல் காந்தி நேற்று தெளிவுபடுத்திவிட்டார்."
கோப்புப்படம்
கோப்புப்படம்

மமதா பானர்ஜி இல்லாத இண்டியா கூட்டணியை நினைத்துக்கூட பார்க்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இண்டியா கூட்டணியை அமைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி இன்று (புதன்கிழமை) அறிவித்தார். மேலும், தனித்துப் போட்டியிட்டாலும்கூட இண்டியா கூட்டணியில் திரிணமூல் அங்கம் வகிப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இந்த நிலையில், மமதா பானர்ஜி இல்லாத இண்டியா கூட்டணியை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் அவர் கூட்டணியின் மிக முக்கியமானத் தூண் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

"அவருடைய (மமதா பானர்ஜி) முழுக் கருத்தை நீங்கள் கேட்கவில்லை. பாஜகவை நாங்கள் வீழ்த்த வேண்டும், பாஜகவை வீழ்த்துவதிலிருந்து நாங்கள் ஒரு அடிகூட பின்வாங்க மாட்டோம் என்பது தான் அவரது முழுக் கருத்து. இதே உணர்வுடன்தான் நாங்கள் மேற்கு வங்கத்தில் நுழைகிறோம். பயணம் பெரிதாக இருக்கும்போது இடையில் சில வேகத் தடைகள் வரத்தான் செய்யும். சில சிவப்பு நிற விளக்குகள் இருக்கும். அதற்காக பயணத்தையே நிறுத்தியாக வேண்டும் என்றாகிவிடாது. வேகத் தடைகளைக் கடந்து, சிவப்பு நிற விளக்குகளைப் பச்சை நிறமாக மாற்றுவோம்.

திரிணமூல் காங்கிரஸ், குறிப்பாக மமதா பானர்ஜி இண்டியா கூட்டணியின் மிக முக்கியமானத் தூண் என்பதை ராகுல் காந்தி நேற்று தெளிவுபடுத்திவிட்டார். மமதா பானர்ஜி இல்லாத கூட்டணியை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். மேற்கு வங்கத்திலும் ஒற்றுமையாக நின்று இண்டியா கூட்டணி போட்டியிடும்" என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in