ஒரேநாளில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள்: அயோத்தி கோயிலில் சாதனை

காலை 7 மணி முதல் 11:30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.
ஒரேநாளில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள்: அயோத்தி கோயிலில் சாதனை
ANI

செவ்வாய்க்கிழமை மட்டும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அயோத்தியில் தரிசனம் மேற்கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தைத் தொடர்ந்து நீண்ட வார இறுதியில் பக்தர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள்கிழமை அன்று நடைபெற்ற பிராண பிரதிஷ்டை விழாவிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். விழாவிற்கு நாடெங்கிலும் இருந்து ஏராளமான சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அதே நேரத்தில் கோயில் வளாகத்திற்கு வெளியே அயோத்தி தெருக்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காகக் காத்திருந்தார்கள்.

திறப்பு விழா நிறைவடைந்ததும் சிறப்பு விருந்தினர்கள் மட்டும் கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். நேற்று முதல் பொதுமக்களும் தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. லக்னௌ முதல் அயோத்தி வரை ஏற்கெனவே லட்சக்கணக்கான மக்கள் குவிந்த நிலையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மாநில நிர்வாகம் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

சிம்லா, பிகார், மேற்கு வங்கம் போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்திருக்கிறார்கள். தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உ.பி. மாநில அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தரிசன நேரம் குறித்தும், போக்குவரத்து குறித்தும் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அயோத்தி கோயிலை நிர்வகித்து வரும் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தரிசன நேரம் குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது. இதன்படி, காலை 7 மணி முதல் 11:30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். பொதுமக்களுக்கான தரிசனத்திற்கு முன்னர் ஆரத்தி வழிபாடு நடைபெறும். அதில் கலந்துகொள்ள விரும்புவர்கள் முன்கூட்டியே அனுமதிச் சீட்டு பெற வேண்டும். மாலை 7.30 மணிக்கு சந்தியா ஆரத்தி பூஜையும் நடைபெறுகிறது.

கோயில் வளாகத்தில் தரிசனம் மேற்கொள்பவர்களுக்கு அடையாள அட்டை அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அதிகார்பூர்வ அடையாள அட்டை இல்லையென்றால் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. நாள்தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை குறித்து உ.பி. மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in