நூலிழையில் உயிர் தப்பித்த மமதா பானர்ஜி: நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை

விபத்திலிருந்து தான் உயிர் பிழைத்து வந்திருப்பதாகக் குறிப்பிட்ட மமதா பானர்ஜி, நெற்றியில் காயமும் லேசான காய்ச்சலும் இருப்பதால் வீட்டில் ஓய்வெடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
நூலிழையில் உயிர் தப்பித்த மமதா பானர்ஜி: நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை
ANI

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியதாக செய்திகள் வெளியாகின.

மமதா பானர்ஜி இன்று (புதன்கிழமை) மேற்கு வங்க மாநிலம் பர்தமானில் இருந்து கொல்கத்தாவுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அவர் பயணித்து வந்த கார், எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடீரென்று நிறுத்தப்பட்டது. இதில் மமதாவின் நெற்றியில் காயம் ஏற்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் பற்றி முடிவெடுப்பதற்காகக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மமதா பானர்ஜி, பர்தமான் சென்றிருந்தார். இன்று காலை பர்தமான் வந்தவர், அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர், மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார். இது நாடு முழுவதும் இண்டியா கூட்டணிக் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கூட்டத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் கொல்கத்தா செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் திரும்ப முடியாமல் சாலை வழியாகப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கடைசி நேரத்தில் பயணத் திட்டம் மாற்றம் செய்யப்பட்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டது.

சாலை வழியாக திரும்பும்போது எதிரே வந்த வேறொரு காரின் மீது முதல்வர் சென்ற கான்வாய் மோத இருந்தபோது திடீரென்று கார் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக முதல்வரின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. பின்னர் கொல்கத்தா திரும்பிய மமதா பானர்ஜி, விபத்திலிருந்து தான் உயிர் பிழைத்து வந்திருப்பதாகத் தெரிவித்தார். நெற்றியில் காயம் இருப்பதாகவும், லேசான காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவித்த அவர், வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும், தனித்துப் போட்டியிடுவது குறித்த மமதா பானர்ஜியின் அறிவிப்புப் பற்றி காங்கிரஸ் கட்சியினர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்கள். ராகுல் காந்தியின் நடைபயணம் நாளை மேற்கு வங்க எல்லையை எட்ட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in