மமதாவைப் பாராட்டும் ஆதித்யா தாக்கரே: மகாராஷ்டிரத்திலும் இண்டியா கூட்டணிக்கு சிக்கல்?

மமதா பானர்ஜி ஒரு புலியைப் போல் பாஜகவை எதிர்கொள்கிறார். அப்படியொரு போராட்ட குணம், மேற்கு வங்க மாநிலத்திற்கு தேவைப்படுகிறது என்று ஆதித்யா தாக்கரே பாராட்டு.
உத்தவ் தாக்கரே குடும்பத்தினரைச் சந்தித்த மமதா பானர்ஜி (கோப்புப்படம்)
உத்தவ் தாக்கரே குடும்பத்தினரைச் சந்தித்த மமதா பானர்ஜி (கோப்புப்படம்)ANI

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி புலியைப் போல் போராடுகிறார் என்று சிவசேனை (யுபிடி) கட்சியின் இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணியில் நீடித்தாலும் மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுவதாக மமதா பானர்ஜி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரே கட்சியினர் தெரிவித்துள்ள பாராட்டு மகாராஷ்டிர அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்தார். எனினும், இண்டியா கூட்டணியில் தாங்கள் நீடிப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து இண்டியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

பால் தாக்கரேவின் பேரனும், உத்தவ் தாக்கரேவின் மகனும் சிவசேனை (யுபிடி) பிரிவின் இளைஞர் அணித் தலைவருமான ஆதித்யா தாக்கரேவிடம் மமதா பானர்ஜியின் முடிவு குறித்து கருத்து கேட்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி ஒரு புலியைப் போல் பாஜகவை எதிர்கொள்கிறார். அப்படியொரு போராட்ட குணம், மேற்கு வங்க மாநிலத்திற்குத் தேவைப்படுகிறது. தன்னுடைய முடிவை அவர் மறுபரிசீலனை செய்வாரா என்பது தெரியவில்லை என்றும் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பஞ்சாபிலுள்ள அனைத்து 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என்றும் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் சிங் பேசியிருக்கிறார். ஏற்கெனவே தொகுதி உடன்பாடு விஷயத்தில் இண்டியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத நிலை இருந்து வந்தது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்டவை இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான இடங்களை ஒதுக்கத் தயாராக இல்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

திரிணமூல் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக வெளிப்படையாக அறிவித்திருப்பது இண்டியா கூட்டணியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் கட்சியும் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in