பிகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்குப் பாரத ரத்னா அறிவிப்பு
படம்: https://twitter.com/narendramodi

பிகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்குப் பாரத ரத்னா அறிவிப்பு

காங்கிரஸுக்கு எதிராக அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்த கர்ப்பூரி தாக்குர், பிகார் மக்கள் மத்தியில் ஜனதா தளத்தை அறிமுகப்படுத்தினார்.

பிகார் முன்னாள் முதல்வரும், சோசியலிஸ கட்சியின் மூத்தத் தலைவருமான மறைந்த கர்ப்பூரி தாக்குருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரின் அண்ணாதுரையாகப் போற்றப்படும் கர்ப்பூரி தாக்குர், சமூக நீதி வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்தவர்.

கல்லூரி மாணவராக இருந்தபோது 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்ற கர்ப்பூரி தாக்குர், இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். நாடு சுதந்திரமடைந்ததும் பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்தவர், பின்னாளில் நேரடி அரசியலுக்கு வந்து ஜெயபிரகாஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றினார்.

1970-ல் பிகார் முதல்வரான கர்ப்பூரி தாக்குர், அவசர நிலை காலத்தில் பதவியை இழந்தார். பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 1977-ல் முதல்வரானார். பிகாரில் முதல் முறையாக இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய கர்ப்பூரி தாக்குர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காகக் கல்வி, வேலைவாய்ப்புகளில் 12 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்.

அவசர நிலைக்குப் பின்னர், மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, பிகாரில் பெரிய அளவில் ஆதரவுத் தளமாக இருந்தவர் கர்ப்பூரி தாக்குர். ஜனதா கட்சி கவிழ்ந்தபோது, சரண் சிங் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். பின்னாளில் ஜனதா கட்சியிலிருந்து வெளியேறி பாரதிய லோக்தளம் என்று தனிக்கட்சியைத் தொடங்கினார்.

பிகாரில் மது விலக்கை வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு கொண்டுவந்த ஒரே முதல்வர் கர்ப்பூரி தாக்குர். பிகாரின் முக்கியமான அரசியல் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோரின் அரசியல் குருவாக இருந்திருக்கிறார். காங்கிரஸுக்கு எதிராக அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்த கர்ப்பூரி தாக்குர், பிகார் மக்கள் மத்தியில் ஜனதா தளத்தை அறிமுகப்படுத்தினார்.

சமீப காலங்களில் ஜனதா தளக் கட்சியினர் மட்டுமல்லாது பிகாரைச் சேர்ந்த பாஜகவினரும் கர்ப்பூரி தாக்குரை மாபெரும் சோசியலிசத் தலைவராகக் கொண்டாடி வருகிறார்கள். ஒரு பக்கம் நிதிஷ் குமார், தாக்குரின் பிறந்தநாளை கொண்டாடியபோது, பாஜகவின் சார்பாக அமித் ஷாவும் பிறந்தநாளைக் கொண்டாடியது அங்கு சர்ச்சையைக் கிளப்பியது.

காலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்திய கர்ப்பூரி தாக்குரின் சிஷ்யர்கள், அதே காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்று பாஜகவினர் அவ்வப்போது விமர்சனம் செய்வதுண்டு.

இந்நிலையில் மோடி தலைமையிலான பாஜக அரசு, கர்ப்பூரி தாக்குருக்குப் பாரத ரத்னா விருது அறிவித்திருப்பது அரசியல் ரீதியாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் உள்ளிட்டோருக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in