ஓய்.எஸ்.ஆருக்குத் துரோகம் இழைத்த கட்சியிலா சேர்வது?: ஷர்மிளாவுக்குத் தொடரும் கண்டனம்

குடும்பப் பெயரை தவறாகப் பயன்படுத்தி, ஒய்.எஸ்.ஆர். ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக ஆளுங்கட்சியினர் கடும் விமர்சனம்
சந்திரபாபு நாயுடு - ஷர்மிளா
சந்திரபாபு நாயுடு - ஷர்மிளாANI

காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கும் ஒய்.எஸ். ஷர்மிளா, மக்களை முட்டாளாக்க நினைக்கிறார் என்று ஒய்.எஸ்.ஆர். கட்சியின் மூத்த தலைவரான ராமகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டியைச் சட்டவிரோதமாக 16 மாதங்கள் சிறையில் அடைத்த கட்சி காங்கிரஸ் என்பதையும் அவரது தந்தையான எஸ் ராஜசேகர் ரெட்டியை ஊழல்வாதி என்று அவதூறு செய்ததும் காங்கிரஸ் கட்சிதான் என்பதும் அவருக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ். ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமாக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் ஆவார்.

ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே முகமாக இருந்தவர் ஒய்.எஸ்.ஆர். அவரது அகால மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து போனது. ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய செல்வாக்கை முற்றிலுமாக இழந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய ஒய்.எஸ்.ஆரின் மகனான ஜெகன்மோகன் ரெட்டியும் அவரது சகோதரியான ஷர்மிளாவும் தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்தார்கள்.

ஜெகன்மோகன் ரெட்டியுடனான கருத்து மோதலின் காரணமாக ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி என்கிற தனிக்கட்சியை ஆரம்பித்த ஒய்.எஸ். ஷர்மிளா, தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகச் செயல்பட்டு வந்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து அதனுடன் தன்னுடைய கட்சியை இணைத்துக் கொண்டார் ஷர்மிளா. காங்கிரஸ் கட்சியில் இணைந்த நாள் முதல் ஷர்மிளாவுக்குப் புதிய பொறுப்பு தரப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இதையடுத்து, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஷர்மிளா, திடீரென்று ஆந்திரப் பிரதேசத்து காங்கிரஸ் கட்சியின் முகமாக மாறியிருப்பது ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத்திலும் அவரது கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது

ஒய்எஸ்ஆர் கட்சியின் மூத்த தலைவரான ராமகிருஷ்ணா ரெட்டி, ஷர்மிளா பற்றி கூறியதாவது:

தெலுங்கானா அரசியலில் தோற்றுப்போன ஷர்மிளா, திடீரென்று ஆந்திரப் பிரதேசம் பக்கம் வந்திருக்கிறார். அவரை நினைத்தால் பரிதாபப்பட வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே சந்திரபாபு நாயுடுவுக்கு உதவி செய்கிறார். சந்திரபாபு நாயுடுவை முதல்வராக்குவதே ஷர்மிளாவின் குறிக்கோள். காங்கிரஸ் கட்சியில் இருந்த படி ஒய்.எஸ். ஆர். ஆதரவாளர்களின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தெலுங்கு தேசத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர நினைக்கிறார். அவர் நினைப்பது எந்நாளும் நடக்கப்போவதில்லை. இத்தனை நாள்கள் எங்கே இருந்தீர்கள்? என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நிச்சயமாக ஆந்திர மக்கள் கேள்வி கேட்பார்கள் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in