ஏப்ரல் 16-ல் நாடாளுமன்றத் தேர்தல்?: தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம்

ஏப்ரல் 16-ஐ உத்தேச தேதியாகக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை..
ஏப்ரல் 16-ல் நாடாளுமன்றத் தேர்தல்?: தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம்
படம்: https://twitter.com/CeodelhiOffice

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி ஏப்ரல் 16 எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 அல்லது 8 கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்தும் அதன் சாத்தியம் குறித்தும் தேர்தல் அலுவலர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலக வட்டாரம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 16-ம் தேதியை உத்தேச தேதியாகக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருப்பது சுற்றறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. தேர்தல் குறித்த அறிவிப்பு வருவதற்கு இன்னும் 2 மாதங்களாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று உத்தேச தேர்தல் தேதி குறித்து தகவல் வெளியாகியிருப்பது விவாதப்பொருளாகியுள்ளது.

தேசியக் கட்சிகளே இன்னும் கூட்டணியை இறுதி செய்யாத நிலையில் தேர்தல் தேதி குறித்து வெளியான செய்திகளால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில் ஊடகங்களில் வெளியான செய்திக்குத் தில்லியிலுள்ள தலைமை தேர்தல் அலுவலர் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஏப்ரல் 16 என்பது உத்தேச தேதிதான் என்றும் தேர்தல் அலுவலர்கள் குறித்த காலத்திற்குள் தேர்தல் பணி சம்பந்தமான முன்னேற்பாடுகளைச் செய்து முடிப்பதற்கு வசதியாகவும் இப்படியொரு தேதி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in