அது பால ராமரே அல்ல: திக்விஜய் சிங் அதிரடி

அயோத்தி கோயிலில் குழந்தை வடிவிலான ராமர் சிலை அமைக்கப்போவதாக தெரிவித்தார்கள். ஆனால், ராம் லல்லா சிலையோ குழந்தை வடிவில் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.
ராமர் சிலை
ராமர் சிலைANI

கருவறையில் நிறுவப்பட்ட பால ராமரின் சிலையின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. நின்ற நிலையில் பால ஸ்ரீராமர் உருவம் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. குழந்தை வடிவில் இருந்தால் மட்டுமே அது பால ராமர். இதை எப்படி பால ராமர் என்று ஏற்றுக்கொள்வது என்று அதிரடியாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் திக் விஜய் சிங்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22 அன்று நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனவரி 22 அன்று ராமர் கோயிலுக்கு தொடர்ந்து பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக் விஜய் சிங், அதிரடியான விமர்சனங்களுக்கு பெயர் பெற்றவர். சமீபத்திய சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடத்தின் கட்டளைக்கு ஏற்ப, கமல்நாத்தை முன்னிலைப்படுத்திப் பின்னணியில் இருந்து இயங்கியவர். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த தோல்விக்குப் பின்னர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பால ராமர் சிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள திக் விஜய் சிங், அயோத்தி கோயிலில் குழந்தை வடிவிலான ராமர் சிலையை அமைக்கப் போவதாகத் தெரிவித்தார்கள். ஆனால், ராம் சிலையோ, குழந்தை வடிவில் இல்லை என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

'நான் ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் சொல்லி வருகிறேன், சர்ச்சைக்குரிய ராம் லல்லா சிலை எங்கேயோ காணாமல் போய்விட்டது. பழைய சிலை இருக்கும்போது புதிதாக சிலை வடிவமைக்க வேண்டிய அவசியம் என்ன? ராம ஜென்மபூமி கோயில் குழந்தை வடிவில் இருக்க வேண்டும். கருவறையில் அன்னை கௌசல்யாவின் மடியில் பால ராமர் இருக்கவேண்டும் என்பதுதான் பல சங்கராச்சாரியார்களின் விருப்பம். புதிய சிலை ஏன் குழந்தையைப் போல் இல்லை' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பதிலளித்துள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சௌபால், திக்விஜய் சிங் போன்றவர்கள் பேசுவதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். அவர் அர்த்தமில்லாத கேள்விகளை எழுப்புகிறார். சிலர் வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவர்கள் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அத்தனையும் அர்த்தமில்லாத விஷயமாக காற்றில் கலந்து போய்விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ராமர் கோவில் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் இருந்து ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தபால் தலைகள் அடங்கிய புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in