ஏழைகளுக்கு பாஜக முன்னுரிமை: பிரதமர் மோடி

"சமீபத்திய தரவுகளின்படி கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளார்கள்."
ஏழைகளுக்கு பாஜக முன்னுரிமை: பிரதமர் மோடி
படம்: https://twitter.com/narendramodi

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாஜக முன்னுரிமை கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இருநாள் பயணமாக கேரளம் சென்றுள்ள பிரதமர் மோடி குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான சுரேஷ் கோபி இல்லத் திருமண விழாவிலும் அவர் கலந்துகொண்டார். அங்கு நடிகர்கள் மோகன் லால், மம்மூட்டி ஆகியோரைச் சந்தித்தார்.

இதன்பிறகு கொச்சி சென்ற பிரதமர் மோடி ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி பாஜக எனப் பேசினார்.

அவர் மேலும் கூறியதாவது:

"சமீபத்திய தரவுகளின்படி கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளார்கள். காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கு முழக்கங்களை மட்டுமே எழுப்பிக் கொண்டிருந்தது.

இந்திய அரசைத் தேர்வு செய்யவே மக்களவைத் தேர்தல். 10 ஆண்டுகளுக்கு முன்பு நமது முதலீடுகள் மற்றும் வெளிநாட்டில் வாழ்பவர்களைப் பாதிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பயங்கரவாதிகள் தாக்குதல் இருந்துகொண்டிருந்தது. இதை வாக்காளர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும். ஊழல் மற்றும் முறைகேட்டுக்கு இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு நீண்ட வரலாறு உள்ளது.

மக்களின் சேமிப்பு மற்றும் வருமானத்தை அதிகரிப்பதே பாஜகவின் முன்னுரிமை. ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஏறத்தாழ ரூ. 1 லட்சம் கோடி மக்களின் பணம் சேமிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜன் ஆஷாதி கோந்திராஸ் மூலம் இதுவரை ரூ. 25 ஆயிரம் கோடியை மக்கள் சேமித்துள்ளார்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவின் வெற்றிக்கு கேரளம் முக்கியமான பங்கை ஆற்றவுள்ளது. நமது முதல் தீர்மானம் "நமது வாக்குச் சாவடியை வெல்லுவோம்." வாக்குச் சாவடியை வென்றுவிட்டால், கேரளத்தை வெல்ல முடியும். கடுமையாக உழைத்து ஒவ்வொரு வாக்காளர் மீது கவனம் செலுத்த வேண்டும். கேரள மக்களுடன் தொடர்பை உண்டாக்குவதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

பாஜக இன்று மக்களின் கட்சியாக மாறியுள்ளது. வேகமான வளர்ச்சி மற்றும் எதிர்காலம் குறித்த தெளிவான திட்டத்தைக் கொண்டுள்ள ஒரே கட்சி பாஜக. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு மட்டுமே பாஜக முன்னுரிமை கொடுக்கும். கேரள மக்களின் அன்பும், ஆதரவும் எனக்கு உத்வேகம் அளிக்கிறது" என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in