ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரிக்கு ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி!

தன்னுடைய கட்சியை இணைத்துக் கொண்ட ஷர்மிளாவுக்கு காங்கிரஸ் கட்சியில் புதிய பொறுப்பு தரப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரிக்கு ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி!
ANI

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்எஸ் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமாக இருந்த ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் ஆவார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஷர்மிளாவுக்குத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புத்தாண்டுத் தினத்தையொட்டி தில்லிக்குப் பயணமான ஒய்.எஸ். ஷர்மிளா, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். தலைமைப் பொறுப்பு தரப்படும் என்று தில்லி தலைமை அளித்த உறுதியின் அடிப்படையில் தன்னுடைய கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைப்பதற்குச் சம்மதித்ததாக சொல்லப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே முகமாக இருந்தவர் ஒய்.எஸ்.ஆர். அவரது அகால மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து போனது. ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய செல்வாக்கை முற்றிலுமாக இழந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய ஒய்.எஸ்.ஆரின் மகனான ஜெகன்மோகன் ரெட்டியும் அவரது சகோதரியான ஷர்மிளாவும் தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்தார்கள்.

ஜெகன்மோகன் ரெட்டியுடனான கருத்து மோதலின் காரணமாக ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி என்கிற தனிக்கட்சியை ஆரம்பித்த ஒய்.எஸ். ஷர்மிளா, தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகச் செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு டிஎஸ்பிஎஸ்சி தேர்வில் கேள்வித்தாள் வெளியான முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்த தயாரானபோது ஜுப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டார் ஷர்மிளா. அப்போது காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னாளில் ஜாமீனில் வெளியே வந்த நாள் முதல் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான அறிக்கைகளும், போராட்டங்களையும் தீவிரமாக முன்னெடுத்தார். கடந்த வருடம் நடைபெற்ற தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து அதனுடன் தன்னுடைய கட்சியை இணைத்துக் கொண்டார் ஷர்மிளா. காங்கிரஸ் கட்சியில் இணைந்த நாள் முதல் ஷர்மிளாவுக்குப் புதிய பொறுப்பு தரப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஷர்மிளாவுக்கு வழிவிட்டே அவர் தன்னுடைய பதவியிலிருந்து விலகியதாகச் சொல்லப்பட்டதை இன்றைய காங்கிரஸ் அறிக்கையும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கான கிடுகு ருத்ர ராஜுவின் பங்களிப்பை பாராட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 'கட்சித் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. கட்சியைத் தொடர்ந்து வளர்ப்பதும், ஆட்சி மாற்றத்திற்காக உழைப்பதும் என்னுடைய முக்கியமான பணியாக இருக்கும்' என்றும் ருத்ர ராஜு விளக்கமளித்திருக்கிறார்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in