பிரதமரின் திடீர் ஆன்மிகப் பயணம்: வைஷ்ணவத் தலங்களில் வழிபாடு!

ஆந்திரப் பிரதேசத்திற்கு வந்த பிரதமர் மோடி, லேபட்சி வீரபத்திரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி@narendramodi

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி ஆன்மீகப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். நாடெங்கும் உள்ள வைஷ்ணவத் தலங்களுக்கு திடீர் பயணத்திற்கான ஏற்பாடுகளைப் பிரதமர் அலுவலகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ராமாயணத்தில் இடம்பெறும் தலங்களும், ஸ்ரீராமர் கோயில்களும் ஆன்மீக பயணத்தில் இடம் பெற்றுவருகின்றன.

சென்ற வாரம் மஹாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரத்திற்கு சென்றவர், அங்குள்ள காலாராம் கோயிலில் தரிசனம் செய்தார். மஹாஷ்டிராவின் அயோத்தி என்றழைக்கப்படும் காலாராம் கோயிலில் உள்ள ஸ்ரீராமர் பிரசித்தி பெற்றவர்.

தரிசனம் முடிந்தபின்னர் நாசிக் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். பின்னர் தில்லிக்கு சென்ற பிரதமர், நான்கு நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் தற்போது தென்னிந்தியாவில் ஆன்மீகப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

இன்று காலை ஆந்திரப் பிரதேசத்திற்கு வந்த பிரதமர் மோடி, லேபட்சி வீரபத்திரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இங்கு சிவன், திருமால், வீரபத்திரருக்கு தனி சந்நிதிகள் உண்டு. ராமாயணத்தில் சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனால் தாக்கப்பட்ட ஜடாயு, உயிரிழந்த இடமாக நம்பப்படுகிறது. தெலுங்கில் லே என்றால் எழுந்திரு என்றும், பட்சி என்றால் பறவை என்றும் அர்த்தம். இதன் காரணமாகவே இவ்வூர் லேபட்சி என்று அழைக்கப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள பிற விஷ்ணு கோயில்களில் யாத்திரை மேற்கொள்ளும் பிரதமர், இன்று மாலை கொச்சியில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்கிறார். நாளை காலை குருவாயூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திரிபிராயர் செல்லும் பிரதமர், அங்குள்ள ஸ்ரீராமசாமி கோயிலில் தரிசனம் செய்யவிருக்கிறார்.

பிரதமர் மோடியின் ஆன்மீகப் பயணத்தில் தமிழகத்தில் உள்ள கோயில்கள் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் திடீர் பயணமாக இன்று காலை ராமேஸ்வரம் சென்ற தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, ராமநாதசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு விஐபிக்களின் திடீர் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in