மேற்கு வங்கம்: இண்டியா கூட்டணியில் நீடிக்கும் உரசல்கள்!

10 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டாலும், பெர்ஹாம்பூர் மற்றும் மால்டா தெற்கு என இரண்டு இடங்களை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திரிணமூல் முடிவு செய்திருக்கிறது...
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது குறித்து உள்ளூர் தலைவர்களுடன் ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். மமதா பானர்ஜியின் திரிணமூல் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு செய்துகொள்வது குறித்து மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் கருத்தைக் கேட்டபோது அனைவரும் ஒருமனதாக கூட்டணி வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இடதுசாரிகளுடன் இணைந்து செயல்படுவதில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கேரளம் தவிர்த்து பிற மாநிலங்களில் 2016, 2021 தேர்தல் காலகட்டங்களில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியான திரிணமூல் கட்சியுடன் இணைந்து செயல்படுவதற்கு காங்கிரஸ் கட்சியினர் தயக்கம் காட்டுகிறார்கள்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் முரண்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்கிற கேள்வி எழாத நேரத்தில் அதைப் பேசுபொருளாக்கியதோடு, தலைவராக கார்கே வரவேண்டும் என்றும் மமதா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார். இதன் மூலமாக ராகுல் காந்தி தலைவராகவும், பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதில் திரிணமூல் கட்சிக்கு விருப்பமில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனை உள்ளிட்டவர்களும் மமதா பானர்ஜிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். இண்டியா கூட்டணிக்குள் ஒரு தனி பிரிவாகவே செயல்பட்டு வருவதாக தில்லி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் தலைமையைப் பொறுத்தவரை திறந்த மனதுடன் கூட்டணி கட்சித் தலைவர்களை அணுகுகிறது. உள்ளூர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் விருப்பத்திற்கு மாறாகவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை அறிவித்திருக்கிறது. ஆனாலும், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றைச் செய்து முடிப்பதில் ஏராளமான சிக்கல்கள் காத்திருக்கின்றன.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் கட்சியுடனான கூட்டணி என்பது தவிர்க்க முடியாது என்பதை ராகுல் காந்தி புரிந்து வைத்திருக்கிறார். அதே நேரத்தில் குறைந்தபட்சம் 10 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், மமதா பானர்ஜியோ பெர்ஹாம்பூர் மற்றும் மால்டா தெற்கு என இரண்டு இடங்களை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

முதல்வர் மமதா பானர்ஜியும், கட்சியின் புதிய பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவரது மருமகனான அபிஷேக் பானர்ஜியும் பாஜகவுடன் ரகசிய உறவில் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக பேசிவருவது, இண்டியா கூட்டணிக்குக் கடுமையான நெருக்கடியைத் தந்திருக்கிறது. மமதா பானர்ஜி தன்னுடைய அதிருப்தியை வெளிக்காட்டாவிட்டாலும் இண்டியா கூட்டணி கூடும்போதெல்லாம் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 48 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வலுவாகவே இருக்கிறது. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் திரிணமூல் முன்னணியில் இருக்கிறது. சிறுபான்மையினரின் வாங்கு வங்கியும் மம்தா பானர்ஜி வசம்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in