ஒற்றுமைக்கான நடைபயணத்தை மேற்கொள்வது ஏன்?: ராகுல் காந்தி பதில்
ANI

ஒற்றுமைக்கான நடைபயணத்தை மேற்கொள்வது ஏன்?: ராகுல் காந்தி பதில்

மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே ஒற்றுமைக்கான நடைபயணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்கான நடைபயணத்தை மணிப்பூரில் ராகுல் காந்தி இன்று தொடக்கிவைத்தார். ஒற்றுமைக்கான இரண்டாம் கட்ட நடைபயணத்தில் 67 நாள்களில் 110 மாவட்டங்கள் வழியாக 6,700 கி.மீ. தூரத்தைக் கடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் மார்ச் 20-ல் மும்பையில் நிறைவடைகிறது.

மணிப்பூரில் நடைபயணத்தைத் தொடக்கிவைத்து ராகுல் காந்தி பேசியதாவது:

"ஒற்றுமைக்கான நடைபயணம் எதற்கு என்கிற கேள்வி எழும். நாட்டில் அநீதி நிலவுகின்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் என அனைத்து வகையிலும் அநீதி இழைக்கப்படுகிறது.

2004 முதல் நான் அரசியலில் செயல்பட்டு வருகிறேன். இந்தியாவில் ஓர் அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு முற்றிலும் சிதிலடைந்திருக்கும் ஒரு இடத்துக்கு நான் செல்வது இதுவே முதன்முறை. 29 ஜூனுக்குப் (ராகுல் மணிப்பூர் சென்ற நாள்) பிறகு, மணிப்பூர் மணிப்பூராகவே இல்லை. இது பிரிந்து எல்லா திசையிலும் வெறுப்பு பரப்பப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அன்புக்குரியவர்களை மக்கள் அவர்களது கண்முன்னே இழந்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை பிரதமர் இங்கு வந்து உங்களது கரங்களைப் பிடித்து கண்ணீரைத் துடைக்கவில்லை. இது அவமானத்துக்குரிய விஷயம்.

உங்களது குரல்களைக் கேட்க நாங்கள் வந்துள்ளோம். உங்களிடம் துயரத்தைப் பகிருங்கள். உங்களது இழப்பையும் வேதனையையும் புரிந்துகொள்ள முடிகிறது. இணக்கம் மற்றும் அமைதிக்குப் பெயர்போன மணிப்பூரை நாங்கள் மீட்டுத் தருவோம்" என்றார்.

ஒற்றுமைக்கான முதற்கட்ட நடைபயணத்தில் ராகுல் காந்தி கன்னியாகுமரி மற்றும் ஸ்ரீநகர் வரை 3,000 கி.மீ. தூரத்துக்கு நடைபயணத்தை மேற்கொண்டார். இரண்டாம் கட்ட நடைபயணத்தை நாட்டின் கிழக்குப் பகுதியிலிருந்து தொடங்கி மேற்குப் பகுதி வரை மேற்கொள்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in