ராமர் கோயில் விழாவுக்கு அழைப்பில்லை: உத்தவ் தாக்கரே என்ன செய்கிறார் தெரியுமா?

அழைப்பிதழ் கிடைக்காத காரணத்தால் நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலுக்குச் சென்று உத்தவ் தாக்கரே வழிபட போவதாக திட்டம்
உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)
உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)ANI

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு மஹாராஷ்டிர ஆளுங்கட்சியான ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சிக்கு அழைப்பிதழ் கிடைத்துள்ள நிலையில் பால் தாக்கரேவின் மகனான உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சிக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் கரசேவைக்கான பணிகளை ஆரம்பித்த வலதுசாரி அமைப்புகளில் பால்தாக்கரேவின் சிவசேனை கட்சிக்குத் தனியிடம் உண்டு. 80-களின் இறுதியில் கரசேவைக்காகத் தன்னுடைய கட்சித் தொண்டர்களை அயோத்திக்கு அனுப்பி வைத்தவர், பால் தாக்கரே.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் பால் தாக்கரேவின் அரசியல் வாரிசான உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கோடி உயர்த்த, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஷிண்டே முதல்வரானது முதல் மஹாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சிக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தை அளித்ததுடன், கட்சி சின்னத்தையும் ஷிண்டேவுக்கு ஒதுக்கியது. பாஜகவும் மற்ற இந்து மத அமைப்புகளும் ஷிண்டே தலைமையிலான கட்சிக்கே முக்கியத்துவம் தந்து வருகின்றன.

இந்நிலையில் ஜனவரி 22-ல் நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் கிடைக்காத காரணத்தால் அன்றைய தினம் உத்தவ் தாக்கரே நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலுக்குச் சென்று வழிபடப் போவதாக அறிவித்துள்ளார். அயோத்தியில் கோயில் திறக்கப்படும் அதே நாள், அதே நேரத்தில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் உத்தவ் தாக்கரே கலந்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.

11-ம் நூற்றாண்டில் ராஷ்டிரகூடர்கள் காலத்தில் நாசிக் நகரில் கட்டப்பட்டது காலாராம் கோயில். மஹாராஷ்டிரத்தின் முக்கியமான ராமர் கோயிலான காலாராம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வழிபாட்டுக்காக வருவதுண்டு. இது கருப்பு நிறமுள்ள ராமருக்கான கோயில். இங்குள்ள மூல விக்கிரகமான கருப்பு நிற ராமர், 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நம்பப்படுகிறது.

1930-ல் டாக்டர் அம்பேத்கர் இங்குதான் ஆலயப் பிரவேசம் மேற்கொண்டார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஏராளமான தலித் மக்கள் பங்கேற்றார்கள். இத்தகைய பின்னணியுடன் கூடிய கோயில்தான், அரசியல் ரீதியாக தற்போது கவனம் பெற்றுள்ளது. ஜனவரி 22, ராமர் கோயில் திறப்பு விழாவைத் தொடர்ந்து மறுநாள் பால் தாக்கரேவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாசிக் நகரில் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு பேரணியும் நடைபெறவிருக்கிறது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in