பிப்ரவரியில் பிரசாரம் ஆரம்பம்: அதிக இடங்களில் போட்டியிட பாஜக முடிவு?

2019 தேர்தலைக் காட்டிலும் அதிகமான இடங்களில் பாஜக களம் காண தயாராக இருப்பதாகவும் அடுத்த மாதமே முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது
பிப்ரவரியில் பிரசாரம் ஆரம்பம்: அதிக இடங்களில் போட்டியிட பாஜக முடிவு?
ANI

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா முடிந்ததும், பிப்ரவரி முதல் வாரத்தில் பாஜகவின் தேசியத் தலைமை தில்லியில் கூடப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பிரச்சாரம் ஆரம்பிப்பது என்றும், முதற்கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு தரப்பிலும் தேர்தல் கூட்டணிகள் இறுதி செய்யப்படாத நிலையில் இண்டியா கூட்டணியை விட ஒரு வலுவான கூட்டணியை பாஜக கட்டமைக்கும் எனத் தெரிகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஏராளமான கட்சிகள் வெளிநடப்பு செய்திருக்கும் நிலையில் ஒரு வலுவான கூட்டணியை அமைத்துவிட்டுதான் பாஜக பிரசாரத்தில் இறங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணி பற்றியெல்லாம் கவலைப்படாமல் தேர்தல் பிரச்சாரத்தை முதலில் ஆரம்பித்துவிட பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாக தில்லியிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி முதல் வாரத்தில் கூடும் கூட்டத்தின் முடிவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.

2019 தேர்தலைக் காட்டிலும் அதிகமான இடங்களில் பாஜக களம் காண தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்தமுறை 436 இடங்களில் போட்டியிட்டது. இம்முறை குறைந்தபட்சம் 500 இடங்களில் போட்டியிடலாம். தமிழகம் போன்ற இதுவரை தடம் பதிக்காத மாநிலங்களிலும் நிறைய இடங்களில் போட்டியிடத் தயாராகிவிட்டார்கள். வெற்றி பெறுவது நோக்கமில்லை என்றாலும் வாக்குச் சதவீதத்தை உயர்த்துவதும், தாமரை சின்னத்தை மக்கள் மத்தியில் மேலும் பிரபலப்படுத்துவதும் முக்கியம் என்று கட்சி நிர்வாகம் நினைக்கிறது.

தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே பிரசாரத்தை ஆரம்பிப்பது, வேட்பாளரை அறிவிப்பது என்பது பாஜகவுக்குப் பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற இடங்களில் முன்னதாகவே வேட்பாளரைக் களமிறக்கி காங்கிரஸ் கட்சிக்குக் கடுமையான நெருக்கடியை தந்திருந்தது.

2019-ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனவரி மாதம் பாஜகவின் தேசியத் தலைமைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசியச் செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள், பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள். இம்முறை அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபாடு காட்டி வருவதன் காரணமாக பிப்ரவரி மாதம் தள்ளிப் போயிருக்கிறது.

சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னதாக பாஜக ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மறுபடியும் ஆட்சிக்கு வரமுடியுமா என்கிற சந்தேகம், ஆட்சியில் இருந்தவர்களுக்கு இருந்தது உண்மை. பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியை சந்தித்திருந்தது. ஆனால், இம்முறை 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி முகம், ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டிய இந்து மக்கள் எழுச்சி போன்றவை பாஜகவுக்கு நம்பிக்கை தந்திருக்கிறது என்று கூறலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in