மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகப் பந்துவீச்சு: டபிள்யுபிஎல் போட்டியில் சாதித்த தெ.ஆ. வீராங்கனை

தென்னாப்பிரிக்க அணிக்காக ஒரு டெஸ்ட், 127 ஒருநாள், 113 டி20 ஆட்டங்களில் ஷப்னிம் விளையாடியுள்ளார்.
ஷப்னிம் இஸ்மாயில்
ஷப்னிம் இஸ்மாயில்

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில், மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாகப் பந்துவீசி சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியில் விளையாடியபோது மணிக்கு 130 கி.மீ.-க்கும் அதிகமான வேகத்தில் பந்துவீசி புதிய சாதனையை 34 வயது ஷப்னிம் நிகழ்த்தியுள்ளார்.

அருண் ஜெட்லி மைதானத்தில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ஷப்னிம் மணிக்கு 132.1 கி.மீ. (82.08 மைல்) வேகத்தில் பந்து வீசினார். மகளிர் கிரிக்கெட்டில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பந்து வீசப்பட்டது இதுவே முதல் முறை. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் இந்த வேகப்பந்தை அவர் வீசினார்.

தென்னாப்பிரிக்காவுக்காகக் கடந்த 8 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் பங்கேற்ற ஷப்னிம், சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதற்கு முன்பு 2016-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மணிக்கு 128 கி.மீ. (79.54 மைல்) வேகத்திலும், 2022 உலகக் கோப்பையில் இருமுறை மணிக்கு 127 கி.மீ. வேகத்திலும் பந்து வீசினார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக ஒரு டெஸ்ட், 127 ஒருநாள், 113 டி20 ஆட்டங்களில் ஷப்னிம் விளையாடியுள்ளார். 317 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

எனினும் அதிவேகமாகப் பந்துவீசிய டபிள்யுபிஎல் ஆட்டத்தில் 4 ஓவர்களில் 1/46 என மோசமாகவே பந்துவீசினார் ஷப்னிம். மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in