ரஞ்சி அரையிறுதி: முதல் நாளில் தமிழ்நாடு தடுமாற்றம்!

முதல் இன்னிங்ஸில் 64.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழ்நாடு அணி.
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://twitter.com/TNCACricket

ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மும்பையில் நடைபெறும் ரஞ்சி கோப்பை அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தமிழ்நாட்டின் மேல்வரிசை பேட்டர்கள் திணறினார்கள். சாய் சுதர்சன் (0), நாராயண் ஜெகதீசன் (4), பிரதோஷ் ரஞ்சன் பால் (8), சாய் கிஷோர் (1), பாபா இந்திரஜித் (11) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். 42 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தமிழ்நாடு தடுமாறியது.

விஜய் சங்கர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் சற்று தாக்குப்பிடித்து கூட்டணி அமைத்தார்கள். விஜய் சங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். முதல் இன்னிங்ஸில் 64.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழ்நாடு அணி.

மும்பை அணியில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், ஷார்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோடியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மோஹித் அவாஸ்தி 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய மும்பைக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. குல்தீப் சென் வேகத்தில் பிரித்வி ஷா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க பேட்டரான பூபேன் லால்வானியை கேப்டன் சாய் கிஷோர் வீழ்த்தினார். இதன்பிறகு, முஷீர் கான் மற்றும் மோஹித் அவாஸ்தி ஆகியோர் முதல்நாள் ஆட்டம் முடியும்வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள்.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து இன்னும் 101 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in