சோபனா ஆஷா 5 விக்கெட்டுகள்: முதல் ஆட்டத்தில் ஆர்சிபி 'த்ரில்' வெற்றி!

மும்பைக்காக சஜனா செய்ததை, உ.பி. வாரியர்ஸுக்கு தீப்தி சர்மாவால் செய்ய முடியவில்லை.
சோபனா ஆஷா 5 விக்கெட்டுகள்: முதல் ஆட்டத்தில் ஆர்சிபி 'த்ரில்' வெற்றி!
ANI

உ.பி. வாரியர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் 2-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் சோஃபி டிவைன், ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெரி ஆகிய மூன்று முக்கிய பேட்டர்கள் சொற்ப ரன்களில் வெளிரேய சபினேனி மேகனா மற்றும் ரிச்சா கோஷ் கூட்டணி அமைத்தார்கள். இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 50 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தது. மேகனா 44 பந்துகளில் 53 ரன்களும், அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 37 பந்துகளில் 62 ரன்களும் எடுத்தார்கள்.

20 ஓவர்களில் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸுக்கும் பேட்டிங் சரியாக அமையவில்லை. 9 ஓவர்களில் 49 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்வேதா செராவத் கூட்டணி அமைத்தார்கள்.

இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 46 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை உ.பி. வாரியர்ஸ் பக்கம் கொண்டு வந்தது. எனினும், பெங்களூரின் சோபனா ஆஷா இன்னிங்ஸின் 17-வது ஓவரில் திருப்புமுனையை உண்டாக்கினார். 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த ஸ்வேதா செராவத், 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த கிரேஸ் ஹாரிஸ் ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

இருந்தபோதிலும், பூனம் கேம்னார் அதிரடியாக விளையாட, கடைசி இரு ஓவர்களில் உ.பி. வாரியர்ஸுக்கு 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. 19-வது ஓவரை வீசிய ஜார்ஜியா வார்ஹம் 5 ரன்களை மட்டுமே கொடுத்து, பூனம் விக்கெட்டை வீழ்த்தினார்.

கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட, 5-வது பந்தில் தீப்தி சர்மா பவுண்டரி அடித்தது உள்பட முதல் 5 பந்துகளில் மொத்தம் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தன. முதல் ஆட்டத்தைப்போல கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டன.

மும்பைக்காக சஜனா செய்ததை, தீப்தி சர்மாவால் செய்ய முடியவில்லை. கடைசி பந்தில் அவரால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சோபனா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in