கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து மும்பை வெற்றி: அதகளமாகத் தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக்!

அறிமுக ஆட்டத்தில், பரபரப்பான சூழலில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே வெற்றிக்குத் தேவையான சிக்ஸரை அடித்து சஜீவன் சஜனா அசத்தினார்.
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து மும்பை வெற்றி: அதகளமாகத் தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக்!
படம்: https://twitter.com/wplt20

மகளிர் பிரீமியர் லீக் இரண்டாவது பருவத்தின் முதல் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக அறிமுக வீராங்கனை சஜீவன் சஜனா கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க, மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக் இரண்டாவது பருவத்தின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தில்லிக்கு தொடக்கம் நிதானமாக அமைந்தது. ஷெஃபாலி வெர்மா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் மெக் லேனிங் மற்றும் அலீஸ் கேப்ஸி கூட்டணி அமைத்தார்கள். 10 ஓவர்கள் முடிவில் தில்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

லேனிங் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன், கேப்ஸியுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்தார். லேனிங் விக்கெட்டுக்கு பிறகு கேப்ஸி அதிரடிக்கு மாற ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. தொடக்கத்தில் சற்று நேரம் எடுத்துக்கொண்ட ரோட்ரிக்ஸ், சரியான டைமிங்கில் பவுண்டரிகளை அடிக்கத் தொடங்கினார்.

இந்த அதிரடியால் 32 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்க கேப்ஸி 36-வது பந்திலேயே அரை சதத்தை எட்டினார். பெரிய சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்து வந்த கேப்ஸி 75 ரன்களுக்கு 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 24 பந்துகளில் 42 ரன்கள் விளாசிய ரோட்ரிக்ஸ் 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் மரிஸான் கேப் 3 பவுண்டரிகள் விளாச தில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பைக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. மும்பையின் நட்சத்திரம் ஹீலி மேத்யூஸ் 2-வது பந்திலேயே டக் அவுட் ஆனார். யாஸ்திகா பாட்டியா மற்றும் நேட் சிவர் பிரண்ட் கூட்டணி அமைத்தார்கள். பவர்பிளேயில் மும்பை 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது. பவர்பிளே முடிந்தவுடன் சிவர் பிரண்ட் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த யாஸ்திகா பாட்டியா 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். இவர் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன், அதிரடிக்கான பொறுப்பை ஹர்மன்பிரீத் கௌர் ஏற்றுக்கொண்டார்.

கடைசி 5 ஓவர்களில் 52 ரன்கள் தேவை, 4 ஓவர்களில் 43 ரன்கள் தேவை, 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவை என வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் அமெலியா கெர் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்கள். 18-வது ஓவரில் கடைசி பந்தில் கெர் 24 ரன்களுக்கு போல்டானார்.

அனபெல் சதர்லாண்ட் வீசிய 19-வது ஓவரின் முதல் 5 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டாலும், கடைசி பந்தை சிக்ஸருக்கு அனுப்பி ஓவரை சிறப்பாக நிறைவு செய்தார் ஹர்மன்பிரீத் கௌர். இதன்மூலம், 32 பந்துகளில் அரை சதத்தையும் அவர் எட்டினார்.

கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட, பந்தை ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் அலீஸ் கேப்ஸியிடம் கொடுத்தார் லேனிங். முதல் பந்திலேயே பூஜா வஸ்த்ராகர் ஆட்டமிழந்தார். ஹர்மன்பிரீத் கௌர் 4-வது பந்தில்தான் ஸ்டிரைக்குக்கு வந்தார். கடைசி 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட, லெக் சைடில் ஃபீல்டிங்கை பலப்படுத்தி வைத்திருந்தார் மெக் லேனிங். ஆனால், ஹர்மன்பிரீத் கௌர் ஆஃப் சைடில் பவுண்டரி அடித்தார். வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட, அடுத்த பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று லாங் ஆன் ஃபீல்டரிடம் கேட்ச் ஆனார். இவர் 34 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.

கடைசி பந்தில் மும்பை வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட, சஜீவன் சஜனா களமிறங்கினார். மகளிர் பிரீமியர் லீக்கில் சஜனாவுக்கு இதுதான் அறிமுக ஆட்டம். இருந்தபோதிலும், மிகுந்த துணிச்சலுடன் இறங்கி வந்து லாங் ஆனில் தூக்கி அடிக்க, பந்து பவுண்டரியை கடந்து விழுந்தது. மிரட்டலான சிக்ஸரால் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் ஆட்டமே மிகவும் பரபரப்பாக நடைபெற்று அதகளத்துடன் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in