சோயிப் பஷிர் அசத்தல்: சுழலில் தடுமாறும் இந்திய அணி

2-வது நாள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. 3 விக்கெட் மீதமுள்ள நிலையில் 134 ரன்கள் பின்தங்கியுள்ளது.
சோயிப் பஷிர் அசத்தல்: சுழலில் தடுமாறும் இந்திய அணி
ANI

19 வயது சோயிப் பஷிர் சுழலில் தடுமாறி கொண்டிருக்கிறது இந்திய அணி. 2-வது நாள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. 3 விக்கெட் மீதமுள்ள நிலையில் 134 ரன்கள் பின்தங்கியுள்ளது.

2-வது நாள் குறிப்பு இப்படி அமையும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்படித்தான் எதிரும் புதிருமாக அவர்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறது ராஞ்சி டெஸ்ட்.

காலை வேளையில் ஆலி ரான்பின்சன், தொடர்ந்து நன்றாக விளையாடி, தனது முதல் டெஸ்ட் அரை சதத்தை எடுத்தார். 96 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தவர், ஜுரெலின் அருமையான கேட்சினால் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். ரூட் - ராபின்சன் கூட்டணி 102 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் இந்தக் கூட்டணி முக்கியக் காரணமாக அமையும். இதன்பிறகு அடுத்த 6 ரன்களுக்குள் மீதமுள்ள இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் ஜடேஜா. அஸ்வின் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்தத் தொடரில் ஜடேஜா ஓரளவு நன்றாகப் பந்துவீசி வருகிறார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி, 104.5 ஓவர்களில் 353 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட், 122 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 112 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தபோதும் இங்கிலாந்து அணி நம்பமுடியாத விதத்தில் விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடியைத் தந்துள்ளது.

இதற்கு இந்திய அணி சரியான பதிலடி தரும் என எதிர்பார்த்தது நடக்கவில்லை. விரிசல்கள் கொண்ட ஆடுகளமும் அதற்கு உதவவில்லை. ரோஹித் சர்மா 2 ரன்களில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜெயிஸ்வாலும் கில்லும் பொறுப்பாக விளையாடினார்கள். ரன்களும் சேர்ந்தது. ஆனால் 38 ரன்கள் எடுத்தபோது கில், பஷிர் பந்தில் எல்பிடபிள்யு ஆனார். இதன்பிறகு சரிவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

கடந்த இரு டெஸ்டுகளிலும் சரியாக விளையாடாமல் போன ரஜத் படிதாருக்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்துள்ளது இந்திய அணி. இம்முறையும் அதை வீணடித்தார். 4 பவுண்டரிகள் அடித்து 17 ரன்கள் எடுத்தபோது பஷிர் பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து, ஜடேஜா, சர்ஃபராஸ் கான் ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இந்தமுறையும் இந்திய அணியை ஓரளவு காப்பாற்றிய ஜெயிஸ்வால், 73 ரன்கள் எடுத்த நிலையில் பஷிர் பந்தில் போல்ட் ஆனார். அடுத்து வந்த அஸ்வினும் 1 ரன்னில் ஹார்ட்லி பந்தில் ஆட்டமிழக்க 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜுரெலும் குல்தீப் யாதவும் பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இந்திய அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. 3 விக்கெட் மீதமுள்ள நிலையில் 134 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஜுரெல் 30, குல்தீப் யாதவ் 17 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 3-வது நாளிலும் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்துமா என்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in