தொடங்கியது மகளிர் பிரீமியர் லீக்!

இறுதி ஆட்டம் மார்ச் 17-ல் தில்லியில் நடைபெறுகிறது
தொடங்கியது மகளிர் பிரீமியர் லீக்!
படம்: https://twitter.com/wplt20

மகளிர் பிரீமியர் லீக் டி20 போட்டியின் இரண்டாவது பருவம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியது.

பாலிவுட் நடிகர்கள் ஷாஹித் கபூர், கார்த்திக் ஆர்யன், வருண் தவன், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் ஒவ்வொரு அணியின் பிரதிநிதியாக வந்து நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள்.

இதன்பிறகு, நடிகர் ஷாருக் கான் தனது வசீகர நடனத்தால் பெங்களூரு மைதானத்தை அதகளப்படுத்தினார். நடனத்தைத் தொடர்ந்து, சிறிய உரை நிகழ்த்திய ஷாருக்கான், போட்டியின் 5 கேப்டன்களையும் மேடைக்கு வரவேற்றார்.

மேடையிலிருந்தபடி அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

இதன்பிறகு, மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் முதல் ஆட்டம் தொடங்கியது. கடந்த பருவத்தில் இறுதி ஆட்டத்தில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் இன்றைய முதல் ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் என 5 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் தலா 8 ஆட்டங்களில் விளையாடுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் எலிமினேட்டரில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதி ஆட்டத்துக்குள் நுழையும், தோல்வியடையும் அணி போட்டியிலிருந்து வெளியேறும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் போட்டியிலிருந்து வெளியேறும்.

எலிமினேட்டர் மார்ச் 15-ல் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் மார்ச் 17-ல் நடைபெறுகிறது. இரு ஆட்டங்களும் தில்லியில் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in