பேஸ்பாலை உதறி சதமெடுத்த ஜோ ரூட்: முதல் நாளில் இங்கிலாந்து 302/7 ரன்கள்

219 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் சதமடித்தார் ரூட். இது, அவருடைய 31-வது சதம்.

பேஸ்பாலை உதறி சதமெடுத்த ஜோ ரூட்: முதல் நாளில் இங்கிலாந்து 302/7 ரன்கள்
ANI

219 பந்துகளில் சதமடிப்பது பேஸ்பால் உத்தியல்ல. வேண்டுமானால் இரட்டைச் சதமெடுக்கலாம். ஜோ ரூட் தனது வழக்கமான பாணியில், பேஸ்பாலுக்கு முன்பு அவருக்கு பல ஆயிரம் ரன்களைக் கொடுத்த நிதானமான, பொறுப்பான பாணியில் விளையாடி சதமெடுத்துள்ளார். ராஞ்சி டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

ரஜத் படிதாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு, பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். 1-2 என பின்தங்கியிருக்கும் டெஸ்ட் தொடரில் 4-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆனால் காலை வேளை அவர்களுக்கு நல்லவிதமாக அமையவில்லை. நோ பால் பந்தில் ஸாக் கிராலியை வீழ்த்தி தன் முதல் விக்கெட்டைத் தவறவிட்டார் ஆகாஷ் தீப். மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் வீசும் அவர், தொடர்ந்து இங்கிலாந்து பேட்டர்களுக்குப் பல கேள்விகளை எழுப்பினார். ஸாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப் என முதல் மூன்று பேட்டர்களுமே ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். அடடா, என்ன ஒரு புதுமுகம் என ஆச்சர்யப்பட்டுப் போனார்கள் இந்திய ரசிகர்கள். பேர்ஸ்டோ 35 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ், ஆடுகளத்தின் தன்மைக்குப் பலியானார். ஜடேஜா வீசிய பந்து மிகவும் தாழ்வாகச் சென்று கால்காப்பைத் தாக்கியது. ஸ்டோக்ஸ் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 24.1 ஓவர்களில் 112/5 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவுக்கு 3-1 என முன்னிலை கிடைக்கும் என உடனே எதிர்பார்ப்பு கிளம்பியது. அடுத்த இரு பகுதிகளிலும் ஆட்டம் எப்படித் திசைமாறும் என யாருமே கணிக்கவில்லை.

ஜோ ரூட்டும் பென் ஃபோக்ஸும் பொறுப்புணர்வை வெளிப்படுத்தி, பேஸ்பாலை அடியோடு மறந்துவிட்டு, நிதானமாக, பந்துகளுக்கு ஏற்றாற்போல் ரன்கள் சேர்த்தார்கள். இந்திய அணி எதிர்பாராத உத்தி இது. இதனால் தடுமாற்றங்கள் உண்டாகின. பலனின்றி டிஆர்எஸ் முறையீடுகளை முழுவதுமாகத் தீர்த்தது இந்தியா. 108 பந்துகளில் அரை சதமெடுத்தார் ரூட். தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி மேலும் விக்கெட் எதுவும் இழக்காமல் 61 ஓவர்களில் 198/5 ரன்கள் எடுத்திருந்தது.

முதல்நாளிலேயே இங்கிலாந்து திருப்பி அடிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ரூட் தொடர்ந்து இந்தியப் பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார். 261 பந்துகளில் 113 ரன்கள் எடுத்த ரூட் - ஃபோக்ஸ் கூட்டணி ஒருவழியாக உடைந்தது. அரை சதம் நெருங்கும்போது தவறான ஷாட்டால் 47 ரன்களுக்கு சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார் ஃபோக்ஸ். பிறகு ஹார்ட்லி 13 ரன்களுக்கு சிராஜ் பந்தில் போல்ட் ஆனார். இந்தியாவில் முதல் டெஸ்டை விளையாடும் ஆலி ராபின்சன், ஃபோக்ஸ் போல ரூட்டுக்கு மற்றொரு நல்ல இணையாக விளங்கினார். 219 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் சதமடித்தார் ரூட். இது, அவருடைய 31-வது சதம். இந்தியாவுக்கு எதிராக 10-வது சதம். பேஸ்பால் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நிதானமான சதமும் இதுதான். ராபின்சன் ஒரு சிக்ஸரும் 4 பவுண்டரிகளும் அடித்தார்.

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. ரூட் 106, ராபின்சன் 31 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். எட்டாவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்துள்ளது இங்கிலாந்து.

ராஞ்சி டெஸ்ட் யார் நினைத்தது போலவும் இல்லாமல் இருக்கப் போகிறது என்பது முதல் நாளிலேயே தெரிந்துவிட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in