319 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து: 2-வது இன்னிங்ஸில் ஜெயிஸ்வால் சிறப்பான ஆட்டம்!

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 319 ரன்களும் இந்தியா 445 ரன்களும் எடுத்துள்ளன.
319 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து: 2-வது இன்னிங்ஸில் ஜெயிஸ்வால் சிறப்பான ஆட்டம்!
ANI
1 min read

3-வது டெஸ்டின் 3-வது நாளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி, டெஸ்டைத் தன் பக்கம் இழுத்துள்ளது.

3-வது நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 319 ரன்களும் இந்தியா 445 ரன்களும் எடுத்துள்ளன. இதனால் இந்திய அணி 170 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

2-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் நேற்றிரவு, குடும்பச் சூழல் காரணமாக ராஜ்கோட் டெஸ்டிலிருந்து அஸ்வின் விலகினார். இதனால் இரட்டை நெருக்கடியை எதிர்கொண்டது இந்தியா. இன்று முழுவதும் இங்கிலாந்து விளையாடினால் என்ன ஆகும் என இந்திய ரசிகர்கள் கவலைப்பட்டார்கள்.

ஆனால், அஸ்வின் இல்லாமல் போனாலும் பெரிய இழப்பை எதிர்கொள்ளவில்லை இந்திய அணி. இன்று காலை முதல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள் இந்தியப் பந்துவீச்சாளர்கள்.

அஸ்வினுக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல், மாற்று ஃபீல்டராகக் களமிறங்கினார். சில ஓவர்களிலேயே பும்ராவின் ஓவரில் ரிவர்ஸ் ஸ்கூப் அடிக்க முயன்று, ஸ்லிப்பில் ஜெயிஸ்வால் கேட்சினால் ஆட்டமிழந்தார் ஜோ ரூட். அவர் 18 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரிலேயே குல்தீப் பந்தில் டக் அவுட் ஆனார் பேர்ஸ்டோ. டக்கெட்டும் ஸ்டோக்ஸும் சிறிய கூட்டணியை உருவாக்கி பவுண்டரிகளை அடித்து வந்தார்கள். ஆனால் நன்கு விளையாடி வந்த டக்கெட், குல்தீப் யாதவ் பந்தில் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு உணவு இடைவேளை வரை நிதானமான ஆட்டத்தை ஸ்டோக்ஸும் பென் ஃபோக்ஸூம் வெளிப்படுத்தினார்கள். உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு ஜடேஜா பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று, பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஸ்டோக்ஸ். 41 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்த பிறகு நிலைமை இந்தியாவின் பக்கம் திரும்பியது. அடுத்த ஒவரில் முதல் பந்திலேயே 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஃபோக்ஸ். அற்புதமான யார்க்கரில் ரெஹான் அஹமதை 6 ரன்களுக்கு போல்ட் செய்தார் சிராஜ். அடுத்த ஓவரில் ஹார்ட்லி 9 ரன்களுக்கு ஜடேஜா பந்தில் வீழ்ந்தார். கடைசியில் ஜேம்ஸ் ஆண்டர்சனை போல்ட் செய்தார் சிராஜ். இது அவருடைய 4-வது விக்கெட்.

இன்று, இங்கிலாந்தின் கடைசி 8 விக்கெட்டுகளை 95 ரன்களுக்கு இழந்தது இங்கிலாந்து. அதிலும் கடைசி 5 விக்கெட்டுகள் 20 ரன்களுக்கு வீழ்ந்தன. 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து, ராஜ்கோட் டெஸ்டில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 30 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. ஜெயிஸ்வால் 66 ரன்களுடனும் ஷுப்மன் கில் 26 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in