ஆஸி. அணி அப்பீல் செய்யாததால் ரன் அவுட் கொடுக்க மறுத்த நடுவர்!

சில ஆஸி. வீரர்களுக்கு இதைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது. ஆனால் நடுவர் தன் முடிவில் உறுதியாக நின்றார்.
ஸ்கிரீன் ஷாட்
ஸ்கிரீன் ஷாட்

கிரிக்கெட்டில் எந்தவொரு விக்கெட்டாக இருந்தாலும் பந்துவீச்சு அணி சார்பாக யாராவது ஒருவர் அப்பீல் செய்திருக்க வேண்டும். அப்பீல் செய்யாமல் நடுவரால் ஒரு முடிவை வழங்க முடியாது.

எல்பிடபிள்யூ, விக்கெட் கீப்பர் கேட்ச் போன்றவற்றுக்கு மட்டும் தீவிரமாக அப்பீல் கேட்கும் வழக்கமுள்ள கிரிக்கெட் வீரர்கள், அப்பீல் செய்யாவிட்டால் என்ன ஆகும் என்பதை இன்று அறிந்திருப்பார்கள்.

அடிலெய்டில் ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டி20 ஆட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலியா, மேக்ஸ்வெலின் 5-வது சர்வதேச டி20 சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. மே.இ. தீவுகள் அணி கடுமையாகப் போராடி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் வரை எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த ஆட்டத்தில் மே.இ. தீவுகள் இன்னிங்ஸின் 19-வது ஓவரில் விநோதமான சம்பவம் நடைபெற்றது. அல்ஸாரி ஜோசப் கவர் பகுதியில் ஷாட் அடித்தார். மிட்செல் மார்ஷ் ஃபீல்டிங் செய்து, ஸ்பென்சர் ஜான்சனிடம் வீசினார். அவர் உடனே ஸ்டம்புகளில் அடித்தார். ஆனால் ரன் அவுட் இல்லை என அவர் நினைத்தால் அப்பீல் செய்யாமல் அடுத்தப் பந்தை வீசத் தயாரானார். மார்ஷும், நேரடியாக ஸ்டம்பில் அடிக்காததற்கு ஏமாற்றமடைந்தார். அப்போது, கள நடுவர் ஜெராட் அபூட், அப்பீல் இல்லை என்று சொன்னார், டிவி நடுவரிடம்.

சில நொடிகளில் மைதானத்தில் டிவி ரீப்ளே காண்பிக்கப்பட்டது. அதில், அல்ஸாரி ஜோசப் ரன் அவுட் ஆனது தெளிவாகத் தெரிந்தது. உடனே, அல்ஸாரி அவுட் ஆகிவிட்டார் எனத் தெரிந்து, ஆஸி. வீரர்கள் அந்த விக்கெட்டைக் கொண்டாட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் கள நடுவர், அவுட் இல்லை, அப்பீல் இல்லை என்றார். இதனால் ஆஸி. வீரர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். வினோதமான முடிவால் உடனே கள நடுவரைச் சுற்றி விவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். நடுவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். தான் அப்பீல் செய்ததாக டிம் டேவிட் கூறினார். நடுவர் ஏற்கவில்லை. சில ஆஸி. வீரர்களுக்கு இதைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது. ஆனால் நடுவர் தன் முடிவில் உறுதியாக நின்றார். இதனால் ஆட்டம் வேறுவழியின்றி வழக்கம்போல தொடர்ந்தது.

இந்தச் சம்பவத்தால் ஆட்டத்தின் முடிவில் மாற்றம் ஏற்படவில்லை. ஆஸி. அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in