யு-19 உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்

கடந்த மூன்று ஐசிசி இறுதிச் சுற்றுகளில் இந்தியாவை ஆஸ்திரேலியா வென்று கோப்பைகளைக் கைப்பற்றியுள்ளது.
இறுதிச் சுற்றை வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி
இறுதிச் சுற்றை வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிANI

50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி உலக சாம்பியன் ஆனதுபோல யு-19 50 ஓவர் உலகக் கோப்பையிலும் இந்தியாவை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

பினோனியில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மேல்வரிசை, நடுவரிசை பேட்டர்களில் ஐந்து பேர் நன்றாக விளையாடியதால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது ஆஸி. அணி. ஹர்ஜாஸ் சிங் மட்டும் அரை சதமெடுத்தார். லிம்பானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி இலக்கை விரட்டியபோது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே வந்தது. தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் மட்டும் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்திய அணி 43.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பேர்ட்மேன், மேக்மில்லன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 79 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிச் சுற்றை வென்ற ஆஸ்திரேலிய அணி, உலகக் கோப்பையை 4-வது முறையாக வென்றது. வேகப்பந்து வீச்சாளர் பேர்ட்மேன், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

கடைசியாக இரு யு-19 உலகக் கோப்பை இறுதிச் சுற்றுகளில் இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலியா, இதற்கு முன்பு 2010-ல் மிட்செல் மார்ஷ் தலைமையில் யு-19 உலகக் கோப்பையை வென்றது. மேலும் கடந்த மூன்று ஐசிசி இறுதிச் சுற்றுகளில் (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை, யு-19 உலகக் கோப்பை) இந்தியாவை ஆஸ்திரேலியா வென்று கோப்பைகளைக் கைப்பற்றியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in