யு-19 உலகக் கோப்பை: இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி!

2016, 2018, 2020, 2022, 2024 எனத் தொடர்ந்து 5-வது முறையாகவும் 9-வது முறையாகவும் 50 ஓவர் யு-19 உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதியடைந்துள்ளது.
கேப்டன் சாஹரன்
கேப்டன் சாஹரன்படம் - twitter.com/ICC

50 ஓவர் யு-19 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பரபரப்பான முறையில் தென்னாப்பிரிக்காவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது இந்திய அணி.

பினோனியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் பிரிடோரியஸ் 76 ரன்களும் ரிச்சர்ட் 64 ரன்களும் எடுத்தார்கள். லிம்பானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலக்கை விரட்டியபோது இந்திய அணி, 12-வது ஓவரில் 32 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு கேப்டன் உதய் சஹாரனும் சச்சின் தாஸூம் அற்புதமான கூட்டணியை அமைத்தார்கள். 42-வது ஓவர் வரை இருவரையும் பிரிக்க முடியாமல் போனது. சதத்தை நெருங்கியபோது துரதிர்ஷ்டவசமாக 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சச்சின் தாஸ். சஹாரன், ஸ்கோர் சமம் ஆனபிறகு 81 ரன்களில் ரன் அவுட் ஆனார். இந்திய அணி, 48.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. மபாகா, டிரிஸ்டன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

வியாழன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் ஜெயிக்கும் அணியுடன் வரும் ஞாயிறன்று இந்திய அணி மோதவுள்ளது. 2016, 2018, 2020, 2022, 2024 எனத் தொடர்ந்து 5-வது முறையாகவும் 9-வது முறையாகவும் 50 ஓவர் யு-19 உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதியடைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in