ஜெயிஸ்வால் இரட்டைச் சதம்: 400-ஐ எடுக்க முடியாமல் ஆட்டமிழந்த இந்தியா

ஜெயிஸ்வால் 290 பந்துகளில் 19 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 209 ரன்கள் எடுத்தார்.
சதமடித்த மகிழ்ச்சியில் ஜெயிஸ்வால்
சதமடித்த மகிழ்ச்சியில் ஜெயிஸ்வால்ANI

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க பேட்டர் ஜெயிஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இரண்டாவது நாள் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை புதிய பந்துடன் தொடங்கினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவரது பந்து இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடியைத் தந்தது. ஜெயிஸ்வால் நிதான ஆட்டத்தைத் தொடர்ந்தார். சிறப்பான லைன், லெங்த்தில் பந்துவீசி வந்த ஆண்டர்சன், முதலில் அஸ்வினை மிகச் சிறப்பான பந்து மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். ஜெயிஸ்வால் அப்போது 191 ரன்கள் எடுத்திருந்தார்.

அஸ்வின் ஆட்டமிழந்தவுடன் அடுத்த ஓவரில் ஸ்டிரைக்குக்கு வந்த ஜெயிஸ்வால் முதலிரு பந்துகளில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து 277-வது பந்தில் இரட்டைச் சதத்தை எட்டினார். வினோத் காம்ப்ளி, சுனில் காவஸ்கருக்குப் பிறகு டெஸ்டில் குறைந்த வயதில் இரட்டைச் சதம் அடித்த மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையையும் ஜெயிஸ்வால் பெற்றார்.

ஆண்டர்சன் ஓவரில் குல்தீப் யாதவ் தடுமாறுவதை உணர்ந்தவுடன், அவரது ஓவரில் ரன் எடுக்காமல் பெரும்பாலும் ஸ்டிரைக்கை தக்கவைத்துக்கொண்டார் ஜெயிஸ்வால். ஆண்டர்சன் ஓவரில் பொறுமை காத்து வந்த அவர், ஒருகட்டத்தில் பொறுமை இழந்து, அவரது ஓவரிலேயே இறங்கி வந்து தூக்கி அடிக்கப் பார்த்தார். பந்து பேட்டில் சரியாக படவில்லை. கவரில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். ஜெயிஸ்வால் 290 பந்துகளில் 19 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 209 ரன்கள் எடுத்தார்.

விக்கெட்டுகள் விழுந்ததால், இரண்டாவது நாள் காலையில் ஆண்டர்சன் தொடர்ச்சியாக 8 ஓவர்கள் வீசினார். இதன்பிறகு, ஆண்டர்சனுக்குப் பதில் ரெஹான் அஹமது பந்துவீச அழைக்கப்பட்டார். ரெஹான் அஹமது இன்றைய நாளின் தனது முதல் ஓவரிலேயே பும்ராவை வீழ்த்தினார். பஷீர் வீசிய அடுத்த ஓவரின் கடைசிப் பந்தில் முகேஷ் குமார் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்லிப்பில் ரூட்டிடம் கேட்ச் ஆனார். இந்திய அணி 400 ரன்களைத் தொட முடியாமல் 396 ரன்களுக்குச் சுருண்டது.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷோயப் பஷீர், ரெஹான் அஹமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லே 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெயிஸ்வால் 209 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஷுப்மன் கில் எடுத்த 34 ரன்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in