கூடுதல் இடங்களைக் கேட்டுள்ளோம்: இந்திய கம்யூனிஸ்ட்

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.
அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்படம்: திமுக ஐடி விங்

திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டதைக் காட்டிலும் கூடுதல் இடங்களைக் கேட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இடையிலான பேச்சுவார்த்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், துணைச் செயலாளர் வீரபாண்டி, முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஆகியோர் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்கள். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழு கூடுதல் தொகுதிகளைக் கேட்டுள்ளதாகக் கூறியது.

நாடாளுமன்ற சுப்பராயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. தொடக்கம் மிக நன்றாக இருந்தது. ஓர் இணக்கமான அணுகுமுறையை நாங்கள் பார்த்தோம். நல்லதே நடக்கும், நல்ல முடிவு கிடைக்கும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். பிற விஷயங்களைப் பிறகு தெரிவிக்கிறோம்.

கடந்த முறையைக் காட்டிலும் கூடுதல் இடங்களைக் கோரியுள்ளோம். மக்களவைத் தேர்தல் என்பதால் மக்களவைக்கான பங்கீடு குறித்து மட்டுமே நாங்கள் பட்டியலைக் கொடுத்துள்ளோம்."

2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாகை மற்றும் திருப்பூர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in