பும்ரா வேகத்தில் சரிந்த இங்கிலாந்து: 253 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஜஸ்பிரித் பும்ரா மிரட்டலாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பும்ரா வேகத்தில் சரிந்த இங்கிலாந்து: 253 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
ANI

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜஸ்பிரித் பும்ரா மிரட்டலாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஜெயிஸ்வால் 209 ரன்கள் குவித்தார்.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்துக்கு இந்த இன்னிங்ஸிலும் ஸாக் கிராலே, பென் டக்கெட் நல்ல தொடக்கத்தைத் தந்தார்கள். தொடக்கத்தில் டக்கெட் வேகமாக ரன் குவித்தார். பும்ரா ஓவரில் ஹாட்ரிக் உள்பட 4 பவுண்டரிகளை விளாசி கிராலேவும் அதிரடியில் இணைந்தார். 9-வது ஓவரிலேயே 50 ரன்களைக் கடந்து பாஸ்பால் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த இந்த இணையை, குல்தீப் யாதவ் பிரித்தார். முதல் விக்கெட்டாக டக்கெட் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடந்த ஆட்டத்தில் சதமடித்த ஆலி போப் நிதானமாக விளையாட, கிராலே அதிரடியாக ரன் குவித்தார். 52 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இவரது அதிரடியால் இங்கிலாந்து அணி 20-வது ஓவரிலேயே 100 ரன்களைத் தொட்டது. 23-வது ஓவரில் அக்‌ஷர் படேலை அறிமுகப்படுத்தினார் ரோஹித் சர்மா. இவரது பந்தை இறங்கி வந்து தூக்கி அடிக்க முயற்சித்த கிராலே, பேட்டின் விளிம்பில் வாங்கினார். ஷ்ரேயஸ் ஐயரின் அட்டகாசமான கேட்சால் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஜோ ரூட் வந்தவுடன் பும்ராவிடம் பந்தைக் கொடுக்க, அவரும் ரூட்டை வெறும் 5 ரன்களுக்குக் காலி செய்தார். தனது அடுத்த ஓவரில் மிகச் சரியான யார்க்கர் பந்தில் ஸ்டம்புகளை பறக்கவிட்டு போப்பை போல்ட் செய்தார். அனுபவமிக்க பேர்ஸ்டோவும், கேப்டன் ஸ்டோக்ஸும் அணியை சரிவிலிருந்து மீட்பார்களா என்று எதிர்பார்க்கப்பட்டது. பேர்ஸ்டோவும் பும்ரா பந்தில் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பென் ஃபோக்ஸ், ரெஹான் அஹமது ஆகியோர் தலா 6 ரன்களுக்கு அடுத்தடுத்து நடையைக் கட்ட, ஸ்டோக்ஸ் வழக்கம்போல கடைசிநிலை பேட்டர்கள் துணையைக் கொண்டு ரன்குவிக்கத் தொடங்கினார். ஹார்ட்லேவும் ஸ்டோக்ஸுடன் இணைந்து பவுண்டரிகள் அடித்தார். இங்கிலாந்து அணி 200 ரன்களைக் கடந்தது. மீண்டும் பும்ரா அற்புதத்தை நிகழ்த்தி ஸ்டோக்ஸை போல்ட் செய்தார். ஸ்டோக்ஸ் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஹார்ட்லேவையும் வீழ்த்திய பும்ரா, டெஸ்டில் 10-வது முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசி விக்கெட்டாக ஜேம்ஸ் ஆண்டர்சனையும் பும்ராவே வீழ்த்தினார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்டில் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.

143 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in