மகத்தான ஷமார் ஜோசப்: காபாவில் ஆஸி.யைத் தோற்கடித்த மே.இ. தீவுகள்!

1997-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்டை வென்றுள்ளது மே.இ. தீவுகள் அணி.
மே.இ. தீவுகள் அணி
மே.இ. தீவுகள் அணிபடம் - twitter.com/ICC

ஆஸ்திரேலியாவில் டெஸ்டை வென்று தொடரை 1-1 எனச் சமன் செய்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. ஷமார் ஜோசப் என்கிற தனி மனிதனின் கடும் முயற்சியினால். பிரிஸ்பேன் டெஸ்டில் இந்த முடிவை யார் எதிர்பார்த்திருக்க முடியும்? 1997-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்டை வென்றுள்ளது மே.இ. தீவுகள் அணி.

ஆஸ்திரேலியாவில் 2 டெஸ்டுகள் விளையாட மேற்கிந்தியத் தீவுகள் வந்தது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த டெஸ்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான 24 வயது ஷமார் ஜோசப், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவின் கோட்டையாகக் கருதப்படும் பிரிஸ்பேனில் நிலைமை மாறியது. மே.இ. தீவுகள் முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்தது. ஆஸி. அணியை முதல் இன்னிங்ஸில் 289 ரன்கள் எடுத்தது. அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்போதே, இந்த டெஸ்டில் என்னவோ நடக்கப் போகிறது எனச் சிலர் யூகித்தார்கள்.

2-வது இன்னிங்ஸில் மே.இ. தீவுகள் அணி, 193 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் ஆஸி. அணிக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-வது நாள் இறுதியில் ஆஸி. அணி 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்திருந்தது. பேட்டிங்கில், மிட்செல் ஸ்டார்க் பந்தை எதிர்கொண்டபோது ஷமார் ஜோசப்பின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்ஸில் அவர் எப்படிப் பந்துவீசுவார் என்கிற கேள்வி எழுந்தது.

காலில் எலும்புமுறிவு ஏற்பட்டிருப்பதாகச் சந்தேகம் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இன்று புயல் போல பந்துவீசினார் ஷமார் ஜோசப். தொடர்ச்சியாக 11.5 ஓவர்கள் வீசி மே.இ. தீவுகளுக்கு வரலாற்று வெற்றியை வழங்கினார். கிரீன் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்மித் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்துப் போராடினார். ஆனாலும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்தது மே.இ. தீவுகளுக்கு. 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் எடுத்த ஷமார் ஜோசப், வெற்றிக்கு அருகில் ஆஸி. அணி வந்தபோதும் கடைசி விக்கெட்டை எடுத்து மே.இ. தீவுகளுக்கு வரலாற்று வெற்றியைப் பரிசாக அளித்தார். பிரபல பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் கொண்ட ஆஸி. அணி மோசமாக விளையாடியதால் மட்டும் தோற்கவில்லை, ஷமார் ஜோசப்பின் திறமைக்கு அதனால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இந்த டெஸ்டில் 8 விக்கெட்டுகளையும் தொடரில் 13 விக்கெட்டுகளையும் எடுத்த ஷமார் ஜோசப்புக்கு ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் கிடைத்தன.

பிரபலங்கள் இல்லாத மே.இ. தீவுகள் அணி, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில், அதன் கோட்டையில் வீழ்த்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட், மே.இ. தீவுகள் கிரிக்கெட் ஆகியவற்றுக்கு இதைவிட ஒரு நல்ல முடிவு வேறு எப்படி இருக்க முடியும்?

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in