ஆஸி. ஓபன்: மெத்வெதேவை வீழ்த்தி சின்னர் சாம்பியன்

2014-க்குப் பிறகு ஃபெடரர், நடால், ஜோகோவிச் இன்றி மற்றொருவர் சாம்பியன்...
ஆஸி. ஓபன்: மெத்வெதேவை வீழ்த்தி சின்னர் சாம்பியன்
படம் - twitter.com/AustralianOpen

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வெதேவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் இத்தாலியின் யானிக் சின்னர்.

முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றில் விளையாடிய 22 வயது சின்னர், நெ.3 வீரர் மெத்வெதேவை எதிர்கொண்டார். அரையிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்தினார் சின்னர். இதுவரை ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் மட்டுமே வென்றுள்ள மெத்வெதேவுக்கு இது மூன்றாவது ஆஸி. ஓபன் இறுதிச் சுற்று. 2021-ல் ஜோகோவிச்சுடனும் 2022-ல் நடாலிடமும் தோற்றிருந்தார். 2014-க்குப் பிறகு ஃபெடரர், நடால், ஜோகோவிச் இன்றி மற்றொருவர் சாம்பியன் ஆகும் போட்டியாக இது அமைந்தது. இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

காலிறுதி, அரையிறுதிகளில் தலா 5 செட்களில் விளையாடியதால் உடலளவில் 27 வயது மெத்வெதேவ் சோர்ந்து போயிருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அட்டகாசமாக விளையாடி முதல் இரு செட்களை வென்றார் மெத்வெதேவ். அதன்பிறகு சின்னரின் ஆட்டம் தொடங்கியது. டை பிரேக்கர் வரை எந்த செட்டையும் கொண்டு போகாமல் அடுத்த மூன்று செட்களையும் வென்ற சின்னர், இறுதியில் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என வென்று ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். இந்த ஆட்டம் மூன்று மணி நேரம் 44 நிமிடங்கள் நடைபெற்றது.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முதல் இத்தாலிய வீரர், சின்னர். இதேபோல 2022-ம் ஆண்டு ஆஸி. ஓபன் போட்டியிலும் 5 செட்கள் கொண்ட இறுதிச்சுற்றில் தோற்றார் மெத்வெதேவ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in