ஷமார் ஜோசப் திறமையை முதலில் கண்டுபிடித்த ‘பிடாக்’ பிரசன்னா!

என்னது, செக்யூரிட்டி வேலை பார்க்கிறியா என்று கேட்டேன். இன்னும் முக்கால் மணி நேரத்தில் வேலைக்குச் செல்லாவிட்டால் தினக்கூலியைத் தரமாட்டார்கள் என்றார் அவர்.
ஷமார் ஜோசப் திறமையை முதலில் கண்டுபிடித்த ‘பிடாக்’ பிரசன்னா!
படம் - twitter.com/ICC

1997-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்டை வென்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. காரணம் - ஷமார் ஜோசப். பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்டில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த மே.இ. தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

காபா டெஸ்டில் 8 விக்கெட்டுகளையும் தொடரில் 13 விக்கெட்டுகளையும் எடுத்த ஷமார் ஜோசப்புக்கு ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் கிடைத்தன.

ஷமார் ஜோசப் திறமையைப் பார்த்தவுடனே கண்டுபிடித்து அவரைத் தொழிமுறை கிரிக்கெட் பக்கம் கொண்டுவந்தவர் ஒரு தமிழர். பிரபல கிரிக்கெட் அனலிஸ்டான ‘பிடாக்’ பிரசன்னா. தென்னாப்பிரிக்க அணியின் அனலிஸ்டாக 11 வருடங்கள் பணியாற்றியுள்ளார். டி20 லீக் அணிகளில் தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ஷமார் ஜோசப் குறித்து சில நாள்களுக்கு முன்பு யூடியூபில் பேசினார் பிரசன்னா. ஷமார் ஜோசப்பின் திறமையைக் கண்டறிந்த விதம் குறித்து அந்தக் காணொளியில் அவர் பேசியதாவது:

சிபிஎல் போட்டியின்போது கயானாவில் நிறைய வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினோம். அதில் பந்துவீசிய ஷமார் ஜோசப்பின் பந்துவீச்சு இலகுவாக இருந்தது. ஓடிவந்து போட்ட விதம் நன்றாக இருந்தது. ஸ்பைக் ஷூ போடாமல் சாதாரண ஷூ அணிந்து வந்திருந்தார். ஒரு பந்து சுர்ரென்று போனது. அழைத்துப் பேசினேன், யார் நீ என்று. மாலில் பாதுகாவலராக உள்ளேன். இங்கு இரண்டு மணி நேரம் பந்துவீசினால் கொஞ்சம் பணம் தருவார்கள். அதற்காக வந்து பந்துவீசுகிறேன். கிரிக்கெட்டில் எனக்கு ஆர்வம் உண்டு என்றார்.

என்னது, செக்யூரிட்டி வேலை பார்க்கிறியா என்று கேட்டேன். ஆமாம், இன்னும் முக்கால் மணி நேரத்தில் வேலைக்கு நான் செல்லவேண்டும். இல்லையென்றால் தினக்கூலியை தரமாட்டார்கள் என்றார். நான் சொல்வது போல நான்குப் பந்துகளைப் போடு என்றேன். அப்போது, அஸாம் கான் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அவரைத் திணறடித்தார் ஷமார் ஜோசப். உடனே, அவரை அழைத்து, நீ ஏன் கயானா அணிக்கு விளையாடுவதில்லை என்றேன். தெரியலையே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே தெரியவில்லையே என்றார்.

உடனே, (கேப்டன்) இம்ரான் தாஹிரை அழைத்தேன், நாளைக்கு அணியின் 11 பேரில் இந்தப் பையனும் இடம்பெற்று விளையாட வேண்டும் என்றேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். நிச்சயமாகவா என்று கேட்டார். என்மீது நம்பிக்கை இருக்கிறது அல்லவா என்று கேட்டேன். சரி என்றார். அவர் பக்கத்தில் நின்றிருந்த ஷமார் ஜோசப் சொன்னார், சார்... வேலைக்குச் செல்ல அரை மணி நேரம் தான் இருக்கிறது. இல்லாவிட்டால் தினக்கூலியைத் தரமாட்டார்கள் என்றார். ஒரு நிமிஷம் இரு.. என்று கூறி, கயானா அணியின் உரிமையாளருக்கு போன் செய்து, இவருக்கு ஒப்பந்தத்தைப் போடு என்றேன். அரை மணி நேரத்தில் சிபிஎல் போட்டியில் கயானா அணிக்காக விளையாடுவதற்கான ஒப்பந்தம் ஷமார் ஜோசப்பின் கையில் இருந்தது. அதைப் பார்த்து ஷமார் கண்ணில் கண்ணீர் பொளபொளவென்று கொட்டியது. உணர்சிவசப்படாதே, நாளைக்கு வந்து பந்துவீச வேண்டும். எவ்வளவு வேகத்தில் பந்துவீசுவாய் என்று கேட்டேன். எவ்வளவு வேகத்தில் போடவேண்டும் என்றார். 150 கி.மீ. வேகத்தில் போடுவியா என்று கேட்டேன். போடுவேன் என்றார். ஆட்டத்தில் மணிக்கு 143.7 கி.மீ வேகத்தில் பந்துவீசினார்.

முதல் டெஸ்டில் 5 விக்கெட் எடுக்கவேண்டும் என்றேன். எடுத்துக் காண்பித்தார். ஓர் ஏழைப் பையனுக்கு, தினக்கூலியாக இருந்தவருக்கு இதுபோல நடக்கிறது என்றால் இதைவிடவும் ஒரு சந்தோஷம் எனக்கு இல்லை. அவர் இன்னும் நிறைய வளர்ச்சியைக் காண வேண்டும் என்றார். ஷமார் ஜோசப் குறித்த பிரசன்னாவின் இந்தக் காணொளி, சமூகவலைத்தளத்தில் அதிகமாகப் பரவிவருகிறது.

ஷமார் ஜோசப்பும், கிரிக்பஸ் இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில், பிரசன்னா, தன் தாய், தந்தைக்குச் சமமானவர். வலைப்பயிற்சியில் நான் வீசிய இரு பந்துகளிலேயே, நீ ஏன் கயானா அணியில் விளையாடவில்லை என்று கேட்டார். நான் அதிர்சியடைந்தேன். அப்போது அவர் யார் என்று எனக்குத் தெரியாது. என்னுடைய பந்துவீச்சை அறிந்துகொள்ள அவருக்கு இரு பந்துகளே போதுமானதாக இருந்தது. நான் சிபிஎல் போட்டியிலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விரைவில் விளையாடுவேன் என்றார். அவர் சரியாகவே சொல்லியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in