43 வயதில் உலக சாதனை: போபண்ணா சாதித்த கதை!

13 வருடங்கள் கழித்து கடந்த வருடம் தான் மீண்டும் இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.
43 வயதில் உலக சாதனை: போபண்ணா சாதித்த கதை!
ANI

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா, ஆஸி.யின் மேத்யூ எப்டனுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்கிற உலக சாதனையையும் போபண்ணா படைத்துள்ளார்.

முதல்முறையாக ஆஸி. ஓபனில், 17-வது முயற்சியில் பட்டம் வென்றுள்ளார் போபண்ணா. 2018, 2023-ல் இரட்டையர் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது.

போபண்ணா - எப்டன் இணை முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளது. இந்த வெற்றியால் ஏறத்தாழ ரூ. 4 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

ஆடவர் இரட்டையர் போட்டிகளில் 61 முறை 19 விதமான ஜோடிகளுடன் விளையாடிய பிறகே பட்டம் வென்றுள்ளார் போபண்ணா.

போபண்ணாவின் வெற்றிக்குப் பிரதமர் மோடி, சச்சின் எனப் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

2017-ல் பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் போபண்ணா.

சாம்பியன் பட்டம் வென்றபிறகு பேசிய போபண்ணா, சில வருடங்களுக்கு முன்பு, என் மனைவிக்கு ஒரு வீடியோ அனுப்பினேன். கடந்த 5 மாதங்களாக ஒரு வெற்றியும் பெறவில்லை. அதனால் ஓய்வு பெறலாம் என எண்ணுகிறேன் என்று. நல்லவேளை அந்த முடிவை நான் எடுக்கவில்லை என்றார்.

இந்த வெற்றியால் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறி, வயதான நெ.1 வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த போபண்ணா, இரட்டையர் போட்டிகளில் 500-க்கும் அதிகமான வெற்றிகளைப் பெற்றுள்ளார். லியாண்டர், சானியா மிர்ஸா 700 வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். பூபதி 697.

கரோனா ஊரடங்குக் காலத்தில் ஐயங்கார் யோகாவில் கவனம் செலுத்தினேன். அது என் உடல்நலத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. வாரத்துக்கு 4 முறை 90 நிமிடளுக்கு யோகப் பயிற்சியில் ஈடுபடுகிறேன் என்றார் போபண்ணா.

கடந்த 7 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பிரிவில் 4 முறை அரையிறுதி மற்றும் அதற்கும் மேல் முன்னேறியுள்ளார் போபண்ணா.

ஆடவர் இரட்டையர் பிரிவில் 2010 யு.எஸ். ஓபன் போட்டிக்குப் பிறகு அதாவது 13 வருடங்கள் கழித்து கடந்த வருடம் தான் மீண்டும் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். தரவரிசையில் 2013-ல் நெ.3 இடத்தை அடைந்த போபண்ணா, பிறகு 2023-ல் தான் மீண்டும் அந்த இடத்துக்கு வந்தார்.

போபண்ணாவுக்குச் சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in