ஹைதராபாத் டெஸ்ட்: இந்தியா அதிர்ச்சித் தோல்வி

பேஸ்பால் கிரிக்கெட் என்றால் என்ன என்பதை முதல் டெஸ்டிலேயே காண்பித்து விட்டது இங்கிலாந்து.
சந்தோஷத்தில் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி
சந்தோஷத்தில் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிANI

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்று மகத்தான நாள். ஒரே நாளில் இரு எதிர்பாராத முடிவுகள். இரண்டுக்கும் டெஸ்ட் வரலாற்றில் இடமுண்டு.

1997-க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் வெற்றியை அடைந்திருக்கிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

சொந்த மண்ணில் கடந்த 11 வருடங்களில் 3 டெஸ்டுகளில் மட்டுமே தோல்வியடைந்திருந்த இந்திய அணியை அமர்க்களமாக, நம்பமுடியாத விதத்தில் விளையாடி மகத்தான டெஸ்ட் வெற்றியைப் பெற்றிருக்கிறது இங்கிலாந்து.

முதல் நாள் முடிவில் இந்திய அணி இங்கிலாந்தை 246 ரன்களுக்கு வீழ்த்தியபோது ஹைதராபாத் டெஸ்ட், மூன்று நாள்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி, 190 ரன்கள் முன்னிலை பெற்றதுடன் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் முதல் 5 விக்கெட்டுகளை 163 ரன்களை வீழ்த்தியது. இதனால் 100 ரன்களுக்குக் குறைந்தபட்ச இலக்கை விரட்டும் நிலைமையே இந்திய அணிக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆலி போப்பும் கீழ்நடுவரிசை பேட்டர்களும் ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றிவிட்டார்கள். அதன்பிறகு இந்திய இன்னிங்ஸில் அறிமுக வீரர், டாம் ஹார்ட்லி, 7 விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்து அணிக்கு மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றிகளில் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார்.

3-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 77 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்திருந்தது. போப் 148, ரெஹன் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய அணி 4-வது நாளில் எப்படியும் மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவாக எடுத்துவிடும் என நினைத்தால் நிலைமை வேறாக இருந்தது.

150 ரன்களைப் பூர்த்தி செய்த போப், ரெஹன் அடுத்து வந்த ஹார்ட்லியின் துணையுடன் மேலும் மேலும் ரன்களைச் சேர்த்துக்கொண்டே இருந்தார். பேஸ்பால் கிரிக்கெட் என்பது மேல்வரிசை பேட்டர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல என்பதை ரெஹனும் அடுத்து வந்த டாம் ஹார்ட்லியும் நிரூபித்தார்கள். மன உறுதியுடன் விளையாடிய ரெஹன், பும்ரா பந்தில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டை எடுத்ததால் மேலும் எந்தவொரு வாய்ப்பையும் இந்திய அணிக்கு வழங்காமல் அடுத்து வந்த ஹார்ட்லி, அதிரடியாக விளையாடினார். சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை மேலேறி வந்து எதிர்கொண்டு பவுண்டரிகள் அடித்தார். இப்படியே போனால் என்ன ஆவது என்கிற உடல்மொழியை இந்திய அணி வீரர்களிடம் காண முடிந்தது. போப் 186 ரன்களில் இருந்தபோது ஸ்லிப் பகுதியில் கேட்சைத் தவறவிட்டார் ராகுல். போப்புக்குக் கிடைக்கும் 2-வது வாழ்க்கை இது.

112, 64, 80 என போப்பின் துணையுடன் இங்கிலாந்தின் கீழ்நடுவரிசைக் கூட்டணி அமர்க்களப்படுத்தியது. எகிறாத, முட்டிக் கீழே சென்ற அஸ்வினின் பந்தால் 34 ரன்களுக்கு போல்ட் ஆனார் ஹார்ட்லி. மார்ட் வுட்டை டக் அவுட் செய்தார் ஜடேஜா. போப்பின் அற்புதமான இரட்டைச் சதத்துக்காக அனைவரும் காத்திருந்தார்கள். ஆனால் பும்ராவின் குறைவேகப் பந்து, ஸ்டம்பைத் தகர்த்தது. 196 ரன்களுக்கு ஆட்டமிழந்த போப்பை இந்திய வீரர்கள் அனைவரும் அவர் அருகில் சென்று பாராட்டினார்கள்.

இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் 102.1 ஓவர்களில் 420 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது. இதனால் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பும்ரா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

வழக்கமாக இந்திய ஆடுகளங்களில் தடுமாறித் தோற்கும் அணியல்ல இது என்பது இங்கிலாந்து பேட்டர்கள், 2-வது இன்னிங்ஸில் விளையாடிய விதத்தில் உறுதியானது. அடுத்தப் பொறுப்பை இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

4-வது நாள் ஆடுகளத்தில் இங்கிலாந்து பேட்டர்கள் விளையாடியதுபோல இந்திய பேட்டர்கள் பொறுப்புடன் விளையாடவில்லை. அதிலும் டாம் ஹார்ட்லியின் பந்துவீச்சு அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது. 11 ஓவர்கள் வரை விக்கெட்டுகள் விழவில்லையென்றாலும் அதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தன. பேஸ்பால் திட்டத்துடன் விளையாடும் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் மட்டுமல்ல, பந்துவீச்சிலும் புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் என்பதை இன்னொருமுறை நிரூபித்தது இங்கிலாந்து.

சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமாக விளையாடி வரும் ஷுப்மன் கில், டக் அவுட் ஆனார். ரோஹித் சர்மா 39 ரன்களுக்கும் ஜெயிஸ்வால் 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். முதல் மூன்று விக்கெட்டுகளையும் ஹார்ட்லி தான் வீழ்த்தினார். 5-வது வீரராக அக்‌ஷர் படேல் களமிறக்கப்பட்டாலும் அதுவும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. 119 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு அஸ்வினும் பரத்தும் சிறிது நம்பிக்கை ஏற்படுத்தினார்கள். சிட்னி டெஸ்ட் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. அஸ்வின் 84 பந்துகளையும் பரத் 59 எதிர்கொண்டு போராடியும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்திய அணி 69.2 ஓவர்களில் 202 ரன்களுக்குச் சுருண்டது. ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் எடுத்து போப்பின் மகத்தான பேட்டிங்குக்கு நியாயம் சேர்த்தார். 28 ரன்கள் வித்தியாசத்தில் எதிர்பாராத டெஸ்ட் வெற்றியை அடைந்துள்ளது இங்கிலாந்து. பேஸ்பால் கிரிக்கெட் என்றால் என்ன என்பதை முதல் டெஸ்டிலேயே காண்பித்து விட்டது. இந்த டெஸ்ட் தொடர், இந்திய அணிக்குக் கடுமையான சவாலை அளிக்கும் என்பதும் தெரிந்துவிட்டது. சுவாரசியங்களுக்குக் காத்திருப்போம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in